Published : 25 Oct 2020 10:08 AM
Last Updated : 25 Oct 2020 10:08 AM

நீதி கிடைக்கப் போராடுவேன்: உ.பி.யைப் போல் குற்றச்சாட்டை ராஜஸ்தானும், பஞ்சாப்பும் மறுக்கவில்லை: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதிலடி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி


உத்தரப்பிரதேச மாநிலத்தைப் போல் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவே இல்லை என்று பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் மறுக்கவில்லை. அவ்வாறு மறத்திருந்தால் நீதி கிடைக்க போராடுவேன் என்று பாஜகவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரில் உள்ள தண்டா எனும் கிராமத்தில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் புலம்பெயர்ந்து வேலை செய்து வருகிறது. அவர்களின் 6 வயது மகள் பலாத்காரம் செய்து, எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸில் 19 வயதுப் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கு சென்று அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். ஆனால், பஞ்சாப் மாநிலத்துக்கு ஏன் செல்லவில்லை என்று மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர் நேற்று கேள்வி் எழுப்பினர்.

இதில் நிர்மலா சீதாராமன் பேசுகையில் “ஹாத்ரஸ் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல் காந்தியும், அவரின் சகோதரி பிரியங்கா காந்தியும் பிக்னிக் சென்றார்கள். அந்தக் கிராமத்துக்கு ஓடோடிச் சென்று அண்ணனும் தங்கையும் ஆறுதல் தெரிவித்தார்கள்.

ஆனால், பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூருக்கும், ராஜஸ்தானுக்கும் ஏன் இருவரும் செல்லவில்லை. குறிப்பிட்ட கொடுமைகளுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சியும், ராகுலும் பிரியங்காவும் குரல் கொடுப்பார்கள் என்பது வெளிப்பட்டுவிட்டது.

பெருமைமிகு காங்கிரஸ் கட்சியும் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கவில்லை. ட்விட்டரில் எப்போதும் கருத்துகளைத் தெரிவித்துவரும் ட்விட்டர் தலைவர்(ராகுல் காந்தி) ஏன் இதில் அமைதியாக இருக்கிறார்?
குறிப்பிட்ட விஷயங்களுக்கு மட்டும்தான் குரல் கொடுப்போம் என்பது காங்கிரஸுக்குப் பொருத்தமாக இருக்கிறதா? .

ஹாத்ரஸ் வழக்கில் 35 எம்.பி.க்கள் சேர்ந்து ட்விட்டரில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்கள். அந்த 35 எம்.பி.க்கள் இன்று எங்கே போனார்கள்?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அளித்த பேட்டியில் “காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தின் 6 வயது மகள் பலாத்காரம் செய்து கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு அநீதி நடந்தால் செல்லும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் தங்கள் கட்சி ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு அநீதி நடந்தால் அவர்களுக்கு அது தெரியாதா.

அரசியல் சுற்றுலா செல்வதற்கு பதிலாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தண்டா கிராமத்துக்கும், ராஜஸ்தானுக்கும் சென்று பெண்களுக்கு எதிரான குற்றம் குறித்து பேச வேண்டும். தங்களின் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் பெண்களுக்கு அநீதி ஏற்பட்டால், அது சோனியா குடும்பத்தினர் கண்களுக்குத் தெரியாதா.

ஆனால், உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸுக்கு மட்டும் சென்றுபாதிக்கப்பட்ட குடும்பத்தினரச் சந்தித்துஆறுதல் தெரிவித்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று கருத்துத் தெரிவித்துள்ளார் அதில் “ உத்தரப்பிரதேச அரசைப் போல், ஒரு பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையிலும், பலாத்காரம் நடக்கவே இல்லை என்று பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள், மறுக்கவில்லை.

அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறவில்லை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டவும், அவர்கள் நீதி பெறுவதைத் தடுக்கவும்இல்லை. உத்தரப்பிரதேச அரசு செய்ததைப் போல் பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் செய்தால், நாங்கள் அந்த மாநிலங்களுக்குச் செல்வேன், நீதி கிடைக்கப் போராடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x