

காஷ்மீர் எல்லைக்குள் அத்து மீறி புகுந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை இந்திய ராணுவத்தினர் நேற்று சுட்டு வீழ்த்தினர்.
லடாக்கில் சீனாவின் ஊடுருவலை இந்திய ராணுவம் தடுத்து வரும் வேளையில், காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 2 மாதங்களாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் அமைந்துள்ள கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது காஷ்மீரில் குளிர் காலம் நிலவுவதால், அதனைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சியில் பாகிஸ்தான்ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த உளவுத் தகவலின்பேரில், இந்திய ராணுவ வீரர்களும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இரவு பகலாக அங்கு தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் கரண் பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் ஆளில்லா விமானம் ஒன்று பறந்து கொண்டிருப்பதை இந்திய ராணுவத்தினர் கவனித்தனர். இதையடுத்து, இயந்திர துப்பாக்கிகள் மூலம் அதனை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
பின்னர், அந்த ஆளில்லா விமானத்தை ஆய்வு செய்த போது, அது சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. எல்லையில் வேவு பார்ப்பதற்காக அதனைபாகிஸ்தான் ராணுவம் அனுப்பியிருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, கரண் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.