Published : 25 Oct 2020 07:22 AM
Last Updated : 25 Oct 2020 07:22 AM

சில நாடுகளின் ராணுவ மாய பிம்பத்தை இந்தோ-திபெத் படை உடைத்தது: மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி பெருமிதம்

சில நாடுகளின் ராணுவ மாயபிம்பத்தை இந்தோ-திபெத் எல்லை காவல் படை உடைத்துள்ளது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கடந்த 1962 சீனப் போருக்குப் பிறகு எல்லை பாதுகாப்புக்காக கடந்த 1962 அக்டோபர் 24-ம் தேதிஇந்தோ-திபெத் எல்லை காவல் படை தொடங்கப்பட்டது. லடாக்கின் காரகோரத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவு வரை நீளும் இந்திய, சீன எல்லைப் பகுதியை இந்த படை வீரர்கள் காவல் காத்து வருகின்றனர்.

இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் 59-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற விழாவில்மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

‘உலகம் ஒரு குடும்பம்' என்ற கொள்கையில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. இந்திய கலாச்சாரம் ஆன்மிகத்தையும் வீரத்தையும் கற்பிக்கிறது. இந்தியாவின் புனித நூல்கள் வாழ்வியல் தத்துவங்களைப் போதிக்கின்றன. அதே புனிதநூல்கள் வீரத்தையும் விதைக்கின்றன.

எங்கேயும் எந்நேரமும் எதிரிகள் உருவாகக்கூடும். அவர்களை எதிர்கொள்ள எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இதை பின்பற்றும் இந்தோ-திபெத் காவல் படை இந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டை தாங்கும் வலுமிக்க தூணாக உயர்ந்து நிற்கிறது. சில நாடுகள் தங்கள் ராணுவம் உலகிலேயே மிகவும் வலிமையானது என்று கூறி வருகின்றன. அத்தகைய நாடு களின் ராணுவ மாய பிம்பத்தை இந்தோ-திபெத் காவல் படை உடைத்தெறிந்துள்ளது. இந்தப் படை வீரர்களின் வீரத்தையும் தேசப்பற்றையும் பார்த்து நாடு பெருமை கொள்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் கிஷண் ரெட்டி எந்தவொரு நாட்டின் பெயரையும் நேரடியாக குறிப்பிட்டு பேசவில்லை. எனினும் அவர் மறைமுகமாக சீனாவை விமர்சித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் முதல் லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் பதற்றம் நீடிக்கிறது. சீன ராணு வத்தின் அத்துமீறல்களை இந்திய ராணுவமும் இந்தோ-திபெத் காவல் படையும் இணைந்து வெற்றிகரமாக முறியடித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x