Published : 25 Oct 2020 06:17 AM
Last Updated : 25 Oct 2020 06:17 AM

2021 ஜூன் மாதம் தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்: பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்

2021-ம் ஆண்டு ஜூன் மாதம் கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நம் நாட்டின் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆர்) சேர்ந்து ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

தற்போது இதன் 2-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. 3-வது கட்ட பரிசோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு (டிசிஜிஐ) பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த 2-ம் தேதி விண்ணப்பம் செய்திருந்தது. இதற்கு டிசிஜிஐ-யும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் இந்த தடுப்பு மருந்து 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் செயல் இயக்குநர் சாய் பிரசாத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தற்போது கோவாக்சின் தடுப்பு மருந்தின் மீதான 3-ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. தற்போது 25 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டு சுமார் 14 மாநிலங்களில் பரிசோதனையை நடத்தவுள்ளோம். எதிர்பார்த்தபடி ஒப்புதல்கள் கிடைத்தால் 2021-ம் ஆண்டு 2-ம் காலாண்டில் பரிசோதனை முடிவுகள் தெரிய வரும். ஜூன் மாதம் கோவாக்சின் தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

நாங்கள் முதல் கட்டம், 2-ம் கட்டம், 3-ம் கட்டம் என பரிசோதனைகளை முழுமையாகச் செய்வதில் உறுதியாக உள்ளோம். அதே நேரத்தில் அவசர கால ஒப்புதலுக்கு மத்திய அரசு தயாராகலாம் என நான் நினைக்கிறேன். ஆனால் அதுபோன்ற ஒப்புதலுக்கு நாங்கள் முந்திச் செல்லவில்லை. அனைத்து விதமான பரிசோதனைகள் முடிந்த பின்னரே மருந்துகளை வெளியிட உத்தேசித்துள்ளோம்.

தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஹரியாணா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 25 ஆயிரம் முதல் 26 ஆயிரம் வரையிலான தன்னார்வலர்களைக் கொண்டு பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதைத்தான் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடமும் (சிடிஎஸ்சிஓ), இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடமும் (டிசிஜிஐ) தெரிவித்துள்ளோம். அனைத்தும் சரியானபடி நடந்தால் 2021-ல் ஜூன் மாதம் மருந்து வெளியாகும்.

இவ்வாறு சாய் பிரசாத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x