

ஜம்மு காஷ்மீரில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பிரிவினைவாத தலைவர் சையது அலிஷா கிலானியும், ஷியா பிரிவின ரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதன்மூலம் பெட்ரோல் குண்டு வீச்சில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் ஜாகித் பட்டின் 4-ம் நாள் துக்க தினத்தையொட்டி இரங்கல் கூட்டம் நடத்தவும், ஷியா பிரிவினர் சார்பில் முகரம் ஊர்வலம் நடத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை போலீஸார் முறியடித்தனர்.
ஸ்ரீநகரிலும் அனந்த்நாக் உள் ளிட்ட தெற்கு காஷ்மீர் நகரங்களிலும் மக்கள் நடமாடுவதற்கு போலீஸார் விதித்திருந்த கட்டுப்பாடுகளையும் மீறி கிலானியும், ஷியா வகுப் பினரும் தனித்தனியாக பேரணி நடத்த முயற்சி மேற்கொண்டனர்.
ஜாகித் பட் மறைவையொட்டி, அவரது சொந்த ஊரான படேன் கூவில் கிலானி தலைமையிலான ஹுரியத் மாநாட்டு கட்சி சார்பில் 4-ம் நாள் இரங்கல் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பங்கேற்கும்படி கிலானி மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்காக, தான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த போதிலும், அதை மீறி ஹைதர்புராவில் உள்ள தனது இல்லத்திலிருந்து வெளியே வந்து இரங்கல் கூட்டத்துக்கு செல்ல முயன்றார். அப்போது போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி பக்கத்தில் உள்ள ஹும்காமா காவல் நிலையத்தில் சிறை வைத்தனர்.
இதனிடையே, ஷியா பிரிவினர் முகரம் பண்டிகையை முன்னிட்டு நேற்று அனந்த்நாக்கில் பொதுக் கூட்டம் மற்றும் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்று கருதிய போலீஸார், நகரில் மக்கள் நடமாடுவதற்கு தடை விதித்திருந்தனர். இந்நிலையில் தடையை மீறி பேரணி நடத்த முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.