Last Updated : 24 Oct, 2020 07:15 PM

 

Published : 24 Oct 2020 07:15 PM
Last Updated : 24 Oct 2020 07:15 PM

‘நாங்கள் பாஜகவுக்குத்தான் எதிரானவர்கள்; தேச விரோதிகள் அல்ல’- பரூக் அப்துல்லா பேட்டி

நாங்களும் எங்கள் அமைப்பும் பாஜகவுக்குத்தான் எதிரானவர்கள். தேச விரோதிகள் அல்ல என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா காட்டமாகத் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திடம் இருந்து பறிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவை மீண்டும் கொண்டுவரும் குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணித் தலைவராக பரூக் அப்துல்லா இன்று தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கூட்டத்துக்குப் பின் இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவை ரத்து செய்ததற்கு எதிராகவும், மீண்டும் 370-வது பிரிவைக் கொண்டுவரக் கோரியும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

இந்தக் கட்சியின் தலைவர்கள், பிரதிநிதிகள் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா இல்லத்தில் இன்று கூடி ஆலோசனை நடத்தினர். ஜம்மு காஷமீருக்கு சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணித் தலைவராக பரூக் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார்.

துணைத் தலைவராக மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியும், செய்தித் தொடர்பாளராக மக்கள் மாநாட்டுக் கட்சியின் சஜித் அலோனும் தேர்வு செய்யப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது தாரிகாமி, குப்தார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தக் கூட்டத்துக்குப் பின் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா நிருபர்களிடம் கூறுகையில், “நாங்கள் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெறக் கோரி போராடுகிறோம். பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறோம். ஆனால், தேச விரோதிகள் அல்ல.

குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணி என்பது தேச விரோதமானது என்று பாஜக தவறான, பொய்யான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுகிறது என்பதை உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன். பாஜக கூறுவது உண்மை அல்ல. எங்கள் அமைப்பு பாஜகவுக்கு எதிரானதே தவிர தேசவிரோதமானது அல்ல. இதில் சந்தேகம் ஏதும் இல்லை.

காஷ்மீருக்கான 370-பிரிவை ரத்து செய்தும், ஜம்மு காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும், பாஜக கூட்டாட்சிக் கட்டமைப்பை உடைத்துவிட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தகர்க்க முயல்கிறார்கள். தேசத்தைப் பிளக்கவும், கூட்டாட்சி முறையை உடைக்கவும் முயன்றனர். இதைத்தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பார்த்தோம்.

குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணி என்பது தேச விரோத ஜமாத் அல்ல. எங்கள் நோக்கம் ஜம்மு காஷ்மீர், லடாக் மக்கள் இழந்த உரிமைகளைப் பெற வேண்டும் என்பதுதான். அதுதான் எங்கள் போராட்டம். இதைத் தவிர போராட்டம் இல்லை. மதத்தின் பெயரைக் கூறி பாஜக ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களைப் பிரிக்க பாஜக முயன்று வருகிறது. இந்த முயற்சி வெற்றி பெறாது. இது மதரீதியான போர் அல்ல. எங்களின் அடையாளத்துக்கான போர். அதனால்தான் ஒன்றாக இணைந்திருக்கிறோம்''.

இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x