Last Updated : 24 Oct, 2020 06:44 PM

 

Published : 24 Oct 2020 06:44 PM
Last Updated : 24 Oct 2020 06:44 PM

பஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல் காந்தி பேசாதது ஏன்? ஹோசியார்பூருக்கு பிக்னிக் போகவில்லையா?- நிர்மலா சீதாராமன் தாக்கு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: கோப்புப் படம்.

புதுடெல்லி

பஞ்சாப்பில் ஹோசியார்பூரில் 6 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ராகுல் காந்தி ஏன் மவுனம் காக்கிறார்? ஹோசியார்பூருக்கு பிக்னிக் செல்லவில்லையா என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸில் 19 வயதுப் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கு சென்று அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரில் உள்ள தண்டா எனும் கிராமத்தில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் புலம்பெயர்ந்து வேலை செய்து வருகிறது. அவர்களின் 6 வயது மகள் பலாத்காரம் செய்து, எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் ஏன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி குரல் கொடுக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''ஹாத்ரஸ் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல் காந்தியும், அவரின் சகோதரி பிரியங்கா காந்தியும் பிக்னிக் சென்றார்கள். அந்தக் கிராமத்துக்கு ஓடோடிச் சென்று அண்ணனும் தங்கையும் ஆறுதல் தெரிவித்தார்கள்.

ஆனால், பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூருக்கும், ராஜஸ்தானுக்கும் ஏன் இருவரும் செல்லவில்லை. குறிப்பிட்ட கொடுமைகளுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சியும், ராகுலும் பிரியங்காவும் குரல் கொடுப்பார்கள் என்பது வெளிப்பட்டுவிட்டது.

பெருமைமிகு காங்கிரஸ் கட்சியும் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கவில்லை. ட்விட்டரில் எப்போதும் கருத்துகளைத் தெரிவித்துவரும் ட்விட்டர் தலைவர்(ராகுல் காந்தி) ஏன் இதில் அமைதியாக இருக்கிறார்?

குறிப்பிட்ட விஷயங்களுக்கு மட்டும்தான் குரல் கொடுப்போம் என்பது காங்கிரஸுக்குப் பொருத்தமாக இருக்கிறதா? ஹாத்ரஸ் வழக்கில் 35 எம்.பி.க்கள் சேர்ந்து ட்விட்டரில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்கள். அந்த 35 எம்.பி.க்கள் இன்று எங்கே போனார்கள்?

பிஹார் மாநிலத்துச் சிறுமி பஞ்சாப் மாநிலத்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். அதுகுறித்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியோ, அதன் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவோ கருத்து ஏதும் கூறவில்லை.

பிஹார் தேர்தலில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்தபோது தலித் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது குறித்து ராகுல் காந்தியிடம், தேஜஸ்வி யாதவ் கேள்வி கேட்டாரா?

கடந்த 2008-ம் ஆண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களான தேஜஸ்வி யாதவும், தேஜ் பிரதாப்பும் ஒரு பெண்ணை ஈவ்டீஸிங் செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்தான். ஆதலால், பஞ்சாப் சிறுமி பலாத்காரச் சம்பவம் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைப் பாதிக்காது.

ஏனென்றால், அவர்கள் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அப்படித்தான் அதிகரித்திருந்தன. கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை பிஹாரில் காட்டாட்சிதானே நடந்தது.

காங்கிரஸ் கட்சியின் அரசியல் விளையாட்டு இது. சில மாநிலங்களில் மட்டும் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போம். ஆனால், தங்களின் கட்சி ஆளும் மாநிலத்தில் அதேபோன்ற கொடுமை நடந்தால் மவுனமாகிவிடுவோம். பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களை அரசியலாக்கக்கூடாது. ஆனால், சில அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட குற்றங்களுக்கு மட்டும்தான் குரல் கொடுக்கின்றன''.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x