புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி டிசம்பர் மாதம் தொடக்கம்: 2022, அக்டோபருக்குள் முடிக்க முடிவு

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா : கோப்புப்படம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா : கோப்புப்படம்
Updated on
2 min read

டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி வரும் டிசம்பர் மாதம் தொடங்கவும், 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், மத்திய பொதுத்துறை பணிகள் அதிகாரிகள் ஆகியோர் நேற்று புதிய நாடாளுமன்றம் கட்டிடம் தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் விளக்கம் அளித்தனர். அப்போது இந்தத் தகவலை அவர்கள் ஓம் பிர்லாவிடம் தெரிவித்தனர்.

இப்போதைய நாடாளுமன்றம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தின் அருகே 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. தரைத்தளம் மட்டும் 16,921 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது.

இதற்காக விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.889 கோடியாகும், 21 மாதங்களில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுளளது. புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும்.

நீண்டகாலமாக கிடப்பில் இருந்த இத்திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விடுக்கப்பட்ட டெண்டரில் 7 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன. இதில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம், டாடா ப்ராஜெக்ட் லிமிட், ஷபூர்ஜி பலூன்ஜி அண்ட் கோ பிரைவட் லிமிட் ஆகிய 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடப் பணிகள் தொடங்குவது தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுடன், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், மத்திய பொதுத்துறைப் பணி அதிகாரிகள் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்குப் பின் மக்களவைச் செயலாளர் விடுத்த அறிக்கையில், “புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரியும் பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்படுவதைக் கண்காணிக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தக் குழுவில் மக்களவைச் செயலாளர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள், அமைச்சரவை அதிகாரிகள், மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் ,புதுடெல்லி மாநகராட்சி அதிகாரிகள், திட்டத்தின் பொறியாளர்கள் ஆகியோர் அடங்கி இருப்பர்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், மத்திய பொதுத்துறை பணிகள் அதிகாரிகள் ஆகியோர் நேற்றைய கூட்டத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தொடர்பாக மக்களவைத் தலைவரிடம் கட்டிடத்தின் வடிவமைப்பு, பொருட்களை மாற்றுதல், ஏற்கெனவே இருக்கும் நாடாளுமன்றத்தின் வரவேற்பறை, பாதுகாப்பு அலுவலகம், மின்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை மாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

தற்போது செயல்பட்டுவரும் நாடாளுமன்றக் கட்டிடத்தில் நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளவும், புதிய கட்டிடத்திலும் நடத்தும் வகையில் இட வசதி அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் கட்டிடம் வரும் டிசம்பர் மாதத்தில் தொடங்கி , 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டிடத்தில் எந்தவிதமான தரமில்லாத பொருட்களைப் பயன்படுத்துதல், பணிகளைத் தாமதப்படுத்துதல் போன்றவற்றில் சமரசம் கிடையாது என்று மக்களவைத் தலைவர் குறிப்பிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in