Last Updated : 24 Oct, 2020 12:39 PM

 

Published : 24 Oct 2020 12:39 PM
Last Updated : 24 Oct 2020 12:39 PM

மெகபூபா முப்தியை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்யுங்கள்; இந்தியாவில் பாதுகாப்பு இல்லாவிட்டால் பாகிஸ்தான், சீனா செல்லட்டும்: பாஜக கண்டனம்

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் தேசியக்கொடி தொடர்பான சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அவரை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு முன், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கடந்த 14 மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் மெகபூபா முப்தி விடுவிக்கப்பட்டார்.

வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் முதல் முறையாக நேற்று ஊடகங்களுக்கு மெகபூபா முப்தி பேட்டி அளித்தார்.

அப்போது மெகபூபா கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி , சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட்டால்தான் இந்திய தேசியக்கொடியை நான் பிடிப்பேன். ஜம்மு காஷ்மீர் மக்களின் மரியாதை, உரிமைகளை பாஜக கொள்ளையடித்துவிட்டது. நாங்கள் சுதந்திரமான, ஜனநாயகமான மதச்சார்பற்ற இந்தியாவை விரும்புகிறோம். இன்றுள்ள சூழலில் சிறுபான்மையினர், தலித்துகள் பாதுகாப்பாக இல்லை. சிறுபான்மையினரை அவமதிக்கிறார்கள்” என்று பேசியிருந்தார்.

இந்தப் பேச்சுக்கு மாநில பாஜக கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. மெகபூபா முப்தியின் தேசவிரோதப் பேச்சுக்கு அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

மாநில பாஜக தலைவர் ரவிந்தர் ரெய்னா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கொடியைத் திரும்பக் கொண்டுவருவதற்கும், 370-வது பிரிவைத் திரும்பக் கொண்டுவரவும் இந்த பூமியில் யாருக்கும் வலிமையும், அதிகாரமும் இல்லை.

மெகபூபா முப்தி பேசிய விவகாரத்தை, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கவனத்தில் கொள்ள வேண்டும். தேசவிரோதமாகப் பேசிய அவரை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

இந்தத் தாய் மண்ணுக்காகவும், தேசத்துக்காகவும், கொடிக்காகவும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் தியாகம் செய்வோம். ஜம்மு காஷ்மீர் இந்திய தேசத்தின் ஒரு பகுதி. இங்கு தேசியக்கொடி மட்டுமே ஏற்றப்பட வேண்டும். ஜம்மு காஷ்மீர் மக்களைத் தூண்டும் நோக்கில் மோசமான பேச்சுகளை பாஜக ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது.

காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவிந்தர் ரெய்னா

காஷ்மீர் மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசக்கூடாது என்று மெகபூபா முப்தி போன்ற தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். மாநிலத்தின் அமைதி, இயல்பு வாழ்க்கையை, சகோதரத்துவத்தைக் குலைக்கும் வகையில் யாரும் செயல்பட அனுமதிக்கமாட்டோம். அவ்வாறு ஏதாவது தவறு நடந்தால், மெகபூபா முப்தி அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

காஷ்மீரில் வாழும் தலைவர்கள் பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதாகக் கருதினால் பாகிஸ்தானுக்கோ, அல்லது சீனாவுக்கோ செல்லட்டும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த முடிவை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை.

இந்தச் சிறப்பு உரிமையால்தான் பிரிவினைவாதம், தீவிரவாதம் வளர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இங்கு தேசியக்கொடியைத் தவிர்த்து எந்தக் கொடியும் ஏற்றக்கூடாது''.

இவ்வாறு ரெய்னா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x