

இது 1962 இல்லை; சீனாவை எதிர்க்க தேவைப்பட்டால் ராணுவத்தின் பின்னால் அருணாச்சல் மக்கள் நிற்க தயங்கமாட்டார்கள் என்று மாநில முதல்வர் பெமா காண்டு தெரிவித்துள்ளார்.
1962 ஆம் ஆண்டு இந்தியா-சீனா போரில் போராடி உயிரிழந்த ராணுவ வீரர் சுபேதார் ஜோகிந்தர் சிங்கின் 58வது நினைவஞ்சலி கூட்டம் இந்திய எல்லைப் பகுதியில் நேற்று நடைபெற்றது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இந்தோ-திபெத் எல்லையில் அமைந்துள்ள பாம் லா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த சிப்பாய்க்கு அருணாச்சல் மாநில முதல்வர் காண்டு அஞ்சலி செலுத்தினார்.
சீன ராணுவத்தை எதிர்த்து போரிட்டு உயிரிழந்த சுபேதார் ஜோகிந்தர் சிங் மரணத்திற்குப் பின் 1962 ஆம் ஆண்டில் அவரது துணிச்சலைப் போற்றி நாட்டின் மிக உயர்ந்த ராணுவ விருதான பரம வீர் சக்ரா வழங்கப்பட்டது. சிங்கின் மகள் குல்வந்த் கவுர், தனது தந்தையின் பெயரில் புதிதாக கட்டப்பட்ட போர் நினைவுச்சின்னத்தை நிகழ்ச்சியில் திறந்து வைத்தார்.
விழாவில் முதல்வர் பெமா காண்டு கலந்துகொண்டு பேசியதாவது:
1962 இந்தோ-சீனா போரில் சீன ராணுவத்துடன் போராடி தனது உயிரைக் கொடுத்த சிங்கின் உயரிய தியாகத்தை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். சீக்கிய படைப்பிரிவின் 1 வது பட்டாலியனில் துணை மேஜராக இருந்த சிங், வடகிழக்கு எல்லைப் பகுதியான உள்ள பாம் லாவில் ஒரு படைப்பிரிவை வழிநடத்தினார்.
1962 இந்தியா-சீனா போரின்போது இதே நாளில் அனைத்து பகைமை சக்திகளுடன் போராடி சுபேதார் சிங் உயிர்த்தயாகம் செய்தார். அருணாச்சல் மக்கள் அவரது துணிச்சலுக்கு வீர வணக்கம் செலுத்துகிறார்கள், மேலும் அவர் தேசத்துக்காக செய்த மிக உயர்ந்த தியாகத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்பர்.
இப்போதுள்ள காலங்கள் 1962 ஐ விட வேறுபட்டவை, சீனா எத்தனை முறை இந்த பிராந்தியத்தை சொந்தமாகக் கோர முயன்றாலும் மாநில மக்களும் இந்திய ராணுவமும் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள்.
இது 1962 அல்ல, 2020, இப்போது விஷயங்கள் வேறுபட்டவை. ஜம்மு-காஷ்மீர் முதல் அருணாச்சல பிரதேசம் வரை நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். தேவைப்பட்டால், அருணாச்சல மக்கள் இந்திய ராணுவத்தின் பின்னால் நிற்க தயங்க மாட்டார்கள்.
இவ்வாறு அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு தெரிவித்தார்.