Published : 24 Oct 2020 06:17 AM
Last Updated : 24 Oct 2020 06:17 AM

அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் காட்டுவதாக புகார்: பேஸ்புக் உயரதிகாரி ஆஜராகி விளக்கம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகவும், காங்கிரஸுக்கு எதிராகவும் பேஸ்புக் நிறுவனம் செயல்படுவதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக மற்றும் வலதுசாரி தலைவர்களின் வெறுப்புணர்வூட்டும் பேச்சுகளை பேஸ்புக் தடை செய்வதில்லை என்றும் அதே சமயத்தில் காங்கிரஸ் தலைவர்களின் வீடியோக்களையும், பதிவுகளையும் திட்டமிட்டு அந்நிறுவனம் தடை செய்வதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக இந்திய பேஸ்புக் பிரதிநிதிகளிடம் விசாரிக்க வலியுறுத்தி, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுகர்பெர்க்குக்கு கடிதமும் எழுதப்பட்டது.

இதனிடையே, பேஸ்புக் நிறுவனத்துக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ பத்திரிகை கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தி வெளியிட்டது. இந்நிலையில், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள், தங்கள் பயனாளிகளின் தகவல்களை விளம்பர நோக்கங்களுக்காக மற்றவர்களுக்கு பகிர்வதாகவும் புகார்கள் எழுந்து வந்தன.

இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேஸ்புக், ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, அந்தக் குழு முன்பு பேஸ்புக் நிறுவனத்தின் கொள்கை பிரிவு தலைவர் அன்கி தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆஜராகி விளக்கமளித்தனர். அப்போது, அவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமான கேள்விகளை கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமேசான் மறுப்பு

கூட்டுக் குழு முன்பு ஆஜராகி விளக்கமளிக்க முடியாது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கூட்டுக் குழு தலைவர் மீனாட்சி லேகி கூறுகையில், “அமேசான் நிறுவனத்தின் இந்த செயல், உரிமை மீறலைக் காட்டுகிறது. அந்நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x