

பிஹார் தேர்தலில் 12 கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி பாஜக-நிதிஷ் தலைமை ஐக்கிய ஜனதாதளக் கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார்.
இன்று சசாரமில் தன் முதல் கூட்டத்தில் பிரதமர் மோரி உரையாற்றினார். உரையில் எதிர்க்கட்சியினரின் பெயரை பிரதமர் நரேந்திர மோடி உச்சரிக்கும் வழக்கமில்லை.
”தேர்தலுக்கு முன்பே தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் இதைத்தான் கூறுகின்றன. ஆனால் சிலர் குழப்பம் விளைவிக்கப் பார்க்கின்றனர். புதிய சக்திகள் உருவாகிவிட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் பிஹாரின் நல்ல மக்கள் உறுதியாக உள்ளனர்” என்று தேஜஸ்வி உள்ளிட்டோர் பெயரைக் கூறாமல் பேசினார்.
பிறகு லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது ஆட்சியை ‘காட்டாட்சி’ என்று வர்ணித்தார். நிதிஷ் குமாருடனான உறவை வர்ணித்த மோடி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பிஹாரை புறக்கணித்ததை 10 ஆண்டுகள் நிதிஷ் எதிர்த்துப் போராடினார் என்ற பிரதமர் மோடி. பிறகு ஆர்ஜேடி நிதிஷுடன் சேர்ந்தது. அதன் பிறகு 18 மாதங்கள் என்ன் நடந்தது என்று அனைவருக்கும் தெரியும் என்று கூறிய மோடி, “குடும்பம் என்ன செய்தது தெரியுமா? என்ன மாதிரியான ஆட்டங்களை ஆடினர்! ஊடகம் எதைப் பேசியது” என்று கூறிய மோடி இந்தச் சூழலில்தான் நிதிஷ் குமார் அவர்களை விட்டு விலகினார், என்றார் மோடி.
மேலும் 15 ஆண்டுகள் நிதிஷ் குமார் ஆட்சி செய்துள்ளார், ஆனால் இடையில்தான் பாஜகவுடன் சேர்ந்து 3-4 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார்.
இதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, தான் நிதிஷ் குமாருடன் சேர்ந்து 3-4 ஆண்டுகள்தான் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில்தான் பிஹார் மாநிலம் வளர்ச்சியை நோக்கிய முன்னெடுப்பைத் துரிதப்படுத்தியது என்றார். இந்த இடத்தில்தான் பாஜகவுடன் சேர்ந்ததால்தான் நிதிஷ் வளர்ச்சிப்பாதைக்கு வந்தார் என்பதை இடக்கரடக்கலாக சுட்டிக் காட்டி நிதிஷ் குமாரின் இடத்தை சூசகமாக தெரிவித்தார் பிரதமர் மோடி.
மூன்று முறைதான் நிதிஷ் பெயரை மோடி குறிப்பிட்டதாக வட இந்திய ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.
மோடி மீது கண்மூடித்தனமான பக்தி வைத்திருக்கிறேன் என்று கூறிய சிராக் பாஸ்வானின் லோக்ஜனசக்தி பெயரை மோடி குறிப்பிடவில்லை. ஆனால் சமீபத்தில் உயிரிழந்த ராம்விலாஸ் பாஸ்வானை பெரிய அளவில் புகழ்ந்து பேசினார்.
பாஜகவுடனான நிதிஷ் குமாரின் கூட்டணியை உறுதியாக முன் வைத்த பிரதமர் மோடி, 3-4 ஆண்டுகள் தங்களுடன் கூட்டணி வைத்த பிறகுதான் பிஹார் முன்னேற்றத்தை நோக்கிய முன்னெடுப்பை விரைவு படுத்தியது என்று நிதிஷ் குமாரின் இடத்தை வரையறுத்தார்.