Last Updated : 23 Oct, 2020 05:27 PM

 

Published : 23 Oct 2020 05:27 PM
Last Updated : 23 Oct 2020 05:27 PM

நெட்ஃபிளிக்ஸ் தொடரை தடை செய்ய வேண்டும்: சஹாரா நிறுவனம் ஆவேசம்

'பேட் பாய் பில்லியனர்ஸ்' என்கிற நெட்ஃபிளிக்ஸ் தொடரை தடை செய்ய வேண்டும் என சஹாரா குழுமம் கூறியுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் புதிய வெப் சீரிஸாக 'பேட் பாய் பில்லியனர்ஸ்' என்கிற தொடர் வெளியானது. இதில் விஜய் மல்லய்யா, நிரவ் மோடி, சுப்ரதா ராய், ராமலிங்க ராஜு உள்ளிட்டவர்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்த மிகப்பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் என்கிற அடிப்படையில் இவர்களின் கதை இதில் சொல்லப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தத் தொடர் வெளியாகக் கூடாது என சுபத்ரா ராய் மற்றும் ராமலிங்க ராஜு ஆகியவர்களின் தரப்பிலிருந்து வழக்கு தொடரப்பட்டு இடைக்கால தடையும் பெறப்பட்டது. இதில் ராஜுவின் வழக்கில், அவரது பகுதியை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. எனவே மற்ற மூன்று பகுதிகளை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டது.

இதில் சுபத்ரா ராயைப் பற்றிய பகுதி மோசமாக ஆய்வு செய்யப்பட்டு ஆதாரமற்ற விஷயங்களைக் கூறுவதாகவும், தங்களது நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்கென்றே எடுக்கப்பட்டிருப்பதாகவும் சஹாரா தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து பேசியிருக்கும் சஹாரா குழுமத்தின் செய்தித் தொடர்பாளர், "இந்த மொத்த ஆவணப் படமும் பொய், தவறான எண்ணத்தில் எடுக்கப்பட்டது, ஏமாற்றுகிறது. சஹாராவின் பெயரைக் கெடுக்க நெட்ஃபிளிக்ஸின் முயற்சியே இது.

இந்த ஆவணப்படத்தில் சொல்லப்பட்டிருப்பதைப் போல நாங்கள் சீட்டு நிறுவனமே அல்ல. அது முழுக்க தவறான தகவல். 21 வருடங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடில் தான் இயங்கி வந்துள்ளோம். பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் பல வருடங்கள் பணியாற்றியிருக்கிறோம். எங்களது பல ஊழியர்கள், பதவி உயர்வு பெற்று தற்போது வேளாண் துறை அமைச்சகத்தின் கீழ் பல கூட்டுறவு சங்கங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் எங்கள் திட்டங்கள் எதிலும், வாடிக்கையாளர்களின் ஒரு ரூபாய் கூட ஏமாற்றப்படவில்லை. ஏஜண்டுகள் கிராமங்களுக்குச் செல்வதை நிறுத்திவிட்டதாகவும், கணக்குத் தொடரவில்லை என்றால் அதிலிருக்கும் பணம் நிறுவனத்தால் எடுத்துக்கொள்ளப் பட்டதாக அவர்களுக்குக் கடிதம் செல்லும் என்றும் ஆவணப்படத்தில் சொல்லப்பட்டிருப்பது அபத்தமானது. சஹாரா குழுமத்தின் பெயரை தவறாக சித்தரிக்கும் முயற்சியே.

முதலீட்டாளர்களை நாங்கள் ஏமாற்றினோம் என்று கூறியிருப்பதும் தவறே. அனைவருக்கும் ஒழுங்காக அவர்களது பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலருக்கு தாமதமாகியுள்ளது. அப்போதும் கூட தாமதமான நாட்களுக்கு வட்டியுடன் சேர்த்தே பணம் கொடுத்து வருகிறோம். மேலும் சஹாராவின் மறு முதலீடு திட்டம் குறித்து எதிர்மறையான ஒரு பிம்பத்தை இந்தப் படம் உருவாக்குகிறது.

இப்படி உண்மைக்குப் புறம்பாகப் பல தகவல்கள் இதில் சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்த ஆவணப் படத்தை நீக்கிவிட்டு, சரியான தகவல்களைச் சேர்த்து தன் பின் மீண்டும் வெளியிடப்பட வேண்டும்" என்று சஹாரா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x