கரோனா வைரஸ் தடுப்பூசி முதல் கட்டமாக யாருக்கு முதலில் கிடைக்கும்? - சிறப்பு நோய்தடுப்பு திட்டத்தை உருவாக்க மத்திய அரசு திட்டம்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read

இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தவுடன், சிறப்பு நோய்த் தடுப்பு திட்டத்தை உருவாக்கி, மத்திய அரசே அனைத்து மருந்துகளையும் கொள்முதல் செய்து முன்னுரிமை அடிப்படையில் மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னுரிமை அடிப்படையில், உடல்ரீதியாக பலவீனமான பிரிவினரைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாவட்ட, மாநிலங்கள் அளவில் முதல்கட்டத்தில் கரோானா தடுப்பூசி வழங்கப்படும். மாநில அரசுகள் தனியாக கரோனா தடுப்பூசியைக் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் கட்டமாக 30 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த 30 கோடி பேரை அடையாளம் காணும் பணியில் மத்தியஅரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதற்கான பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

உலகளாவிய நோய்தடுப்பு திட்டத்துக்கு இணையாகவே மத்திய அரசின் சிறப்பு நோய்த் தடுப்புத் திட்டமும் செயல்படும். இந்த திட்டத்துக்குத் தேவையான செயல்முறை, தொழில்நுட்பம், நெட்வொர்க், தடுப்பூசியை பகிர்ந்தளித்தல் போன்றவை ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் முறையை வைத்து செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கப்படுவோர் 4 பிரிவினராக பிரிக்கப்படுகின்றனர். முதலில் ஒரு கோடி மருத்துவர்கள், சுகாதாரப்பிரிவினர், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

அடுத்ததாக 2 கோடி முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதில் போலீஸார், ஆயுதப்படை போலீஸார், சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோர் அடங்குவர்.

3-வதாக 50 வயதுக்கு மேற்பட்ட 26 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும், 4-வதாக இணை நோய்களுடன் இருக்கும் 50 வயதுக்குள் கீழான சிறப்பு பிரிவினருக்குத் தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பயனாளிகள் குழுக்கள் குறித்த விவரங்களை வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் மாநிலங்கள் அனுப்பி வைக்க வேண்டும். தடுப்பூசி போடப்படும் ஒவ்வொரு நபரும், ஆதார் அடிப்படையில் இணைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா தடுப்பூசி குறித்த தேசிய அளவிலான வல்லுநர்கள் குழு நாட்டில் உள்ள பதப்படுத்தும் நிலையங்கள், குளிர்பதனக் கூடங்கள் குறித்து கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. தடுப்பு மருந்துகள் வந்தால் அவற்றை பாதுகாத்தல், சேமித்து வைத்தலுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஒரு பேட்டியில் கூறுகையில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் 25 கோடி மக்களுக்கு தேவைப்படும் 40 முதல் 50 டோஸ் மருந்துகள் கிடைக்கும். அனைத்து மக்களுக்கும் நியாயமாகவும், சரிவிகிதத்திலும் கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in