

பிஹார் மாநிலம் தொடர்்ந்து வளர்ச்சியை நோக்கிச் செல்ல தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களியுங்கள். 15 ஆண்டு கால ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில் கொள்ளைகளும், குற்றங்களும் நிரம்பி இருந்தன என்று பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.
பிஹார் மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்க உள்ளது. நவம்பர் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 28-ம் தேதி 71 தொகுதிகளுக்கு நடக்கிறது.
இதற்கான முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார். சசாரம் நகரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பிஹார் மாநிலம் இரு மகன்களை இழந்துவிட்டது. ராம்விலாஸ் பாஸ்வான், ரகுவன்ஸ் பிரசாத் சிங் ஆகிய இருவரின் மறைவுக்கு வருந்துகிறேன். இரு தலைவர்களும் தங்களின் கடைசிக் காலம் வரை ஏழைகளுக்கும், தலித் மக்களுக்கும் போராடினார்கள்.
நாட்டின் குற்ற வீதத்தில் பிஹார் மாநிலம் 23-வது இடத்தில் இருக்கிறது. பிஹாரில் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி வந்தபின் மக்கள் அச்சமில்லாமல் இருக்கிறார்கள், குற்றங்கள் குறைந்துள்ளன. ஆனால், கடந்த 1990களில் இருந்து 15 ஆண்டுகள் மாநிலத்தை ஆண்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சியில் குற்றங்களும், கொள்ளையும் நிரம்பி இருந்தன.
இப்போது இருக்கும் அரசு இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்டஅரசு. மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மத்திய அரசும் சேர்ந்து, பிஹாரின் வேகமான வளர்ச்சிக்கு உதவும். ஆனால், கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டுவரை ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மாநிலத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டனர்.
கரோனாவுக்கு எதிரான போரில் பிஹார் மக்கள் சிறப்பாகச் செயல்பட்டதற்கும், போராடியதற்கும் பாராட்டு தெரிவிக்கின்றனர். பிஹார் அரசு விரைவாக தடுப்பு நடவடிக்கைளை எடுக்காமல் இருந்திருந்தால், ஏராளமானோர் உயிரிழந்திருப்பார்கள். மாநில அரசு துரிதமாகச் செயல்பட்டது பாராட்டுக்குரியது. இன்று பிஹார் மாநிலத்தில் கரோனா குறைந்து, மக்கள் ஜனநாயகத் திருவிழா நோக்கி நகர்ந்துள்ளார்கள்.
பிஹார் மாநிலத்தின் மகன்கள் கல்வான் பள்ளத்தாக்கு, புல்வாமா தாக்குதலில்வீர மரணம் அடைந்துள்ளார்கள். அந்த மண்ணின் மைந்தர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
பிஹார் மாநிலத்தை இதற்கு முன் ஆண்டவர்கள் தற்போது மாநிலத்தை பொறாமைக் கண்களுடன் பார்க்கிறார்கள். மாநிலத்தை பின்னோக்கி தள்ளியவர்களை மக்கள் மறந்துவிடக்கூடாது. அவர்களின் ஆட்சியில்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமானது,ஊழல் அதிகரித்தது.
மத்திய அரசு காஷ்மீருக்கான 370 பிரிவை ரத்து செய்துள்ளது. ஆனால், சிலர் தாங்கள் ஆட்சிக்குவந்தால் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டுவருவோம் என்கிறார்கள். இதை கருத்தை பிஹார் மாநிலத்தில் கூறுவதற்கு அவர்களுக்கு துணிச்சல் இருக்கிறதா. இந்த மாநிலத்திலிருந்து ஏராளமான மகன்கள், மகள்கள் எல்லையைப் பாதுகாக்க சென்றுள்ளார்கள். இப்படி பேசுவது பிஹார் மாநிலத்தை புண்படுத்தியது போன்றதல்லவா?
சமீபத்தில் கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு நன்மைதரக்கூடியவை. ஆனால், எதிர்க்கட்சிகள் அந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடி இடைத்தரகர்களையும், புரோக்கர்களையும் பாதுகாக்கிறார்கள், அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்.
மாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில் இருந்த காலத்தை மறந்துவிடாதீர்கள். இப்போது நிதிஷ் குமார் ஆட்சியில் மின்சாரம், சாலைகள், தெருவிளக்குகள் என வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.
பிஹார் மாநிலம் வளர்ச்சியை நோக்கிச் செல்ல நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களியுங்கள்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.