

உத்திரப்பிரதேசக் காவல்துறையில் உயர் அதிகாரியின் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முஸ்லிமான இன்தஸார் அலிக்கு இது குறித்து மூன்று முறை எச்சரிக்கை செய்த பின் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உ.பி.யின் மேற்குப்பகுதியிலுள்ள பாக்பத் மாவட்டத்தின் கிராமமான ரமலா காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவர் இன்தஸார் அலி (50). இவர் சுமார் 6 அங்குல நீளத்தில் தாடி வளர்த்து வைத்திருக்கிறார்.
இதற்கான அனுமதி பெறாமலே நீண்ட தாடி வளர்த்தமைக்காக இன்தஸார் அலியை பணியிடைநீக்கம் செய்து பாக்பத் மாவட்ட எஸ்பியான அபிஷேக்சிங் உத்தரவிட்டுள்ளார். நேற்று வெளியான இந்த உத்தரவால் சர்சை கிளம்பியுள்ளது.
இதுகுறித்து பாக்பத் மாவட்ட எஸ்பி அபிஷேக்சிங் ’இந்து தமிழ் திசை’ இணையத்திடன் கூறும்போது, ‘‘இப்பிரச்சனையில் முறையாக விசாரணை நடத்தப்பட்டு நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனது கவனத்தில் இவரை போல் வேறு எவரும் இதுபோல் அனுமதியின்றி உ.பி. காவல்துறையில் தாடி வளர்ப்பதாகத் தெரியவில்லை.
இதற்கு முன் சீருடை அணிவதிலும் உதவி ஆய்வாளர் இன்தஸார் ஒழுக்க விதிமுறைகளை மீறியுள்ளார். இதற்காக அவர் அனுமதி பெறவேண்டும் என இரண்டு முறை அளித்த எச்சரிக்கையையும் அலி பொருட்படுத்தவில்லை.’’ எனத் தெரிவித்துள்ளார்.
உ.பி. மாநிலக் காவல்துறையின் ஒழுங்கு விதிகளின்படி சீக்கியர்களுக்கு மட்டுமே தாடி வளர்க்கும் அனுமதி உள்ளது. மற்ற மதத்தினர் தாடி வளர்ப்பதற்கானக் காரணத்தை தம் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.
இதன் பின்னணியில், காவல்துறையில் பணியாற்றும் அனைவரிடையே ஒரே மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்துவது காரணமானது. குறிப்பிட்டக் காரணங்களுக்காக
தாடி வளர்க்க விரும்புபவர்கள் அதற்காக தம் உயர் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுமார் 25 வருடங்களுக்கு முன் உ.பி. காவல்துறையில் இணைந்த இன்தஸார் அலி, துவக்கம் முதல் தாடி வளர்த்து வருவதாகக் கூறுகிறார். இருப்பினும், கடந்த நவம்பர் 2019 இல் முதன்முறையாக தன் தாடிக்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்தஸார் அலி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த 1994 இல் நான் இப்பணியில் இணைந்தது முதல் வளர்த்து வரும் தாடிக்கும், ஐந்துவேளை தொழுகைக்கும் இதுவரை எவரும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை.
கடந்த வருடம் இப்பிரச்சனை எழுந்தமையால் நான் அனுமதி வேண்டி அனுப்பிய விண்ணப்பத்திற்கு எனக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இதற்கான பதில் எனக்கு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.’’ எனத் தெரிவித்தார்.
எனினும், இதற்கான அனுமதி இன் தஸார் அலிக்கு மறுக்கப்பட்ட பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாக்பத் எஸ்பியான அபிஷேக்சிங் விளக்கம் அளித்துள்ளார். இப்பிரச்சனைக்கு உள்ளான இன்தஸார் அலி, உபியில் மதரஸாக்கள் அதிகமுள்ள சஹரான்பூரில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்.
இதனிடயே, இன்தஸார் அலியின் பணியிடைநீக்க விவகாரம் சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இதன் மீது பல்வேறு வகை ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகிறது.
இதேபோன்ற ஒரு காரணத்திற்காக, இந்திய ராணுவத்தின் அஸாம் ரைபிள்ஸ் பிரிவின் படைவீரரான ஹைதர் அலி பணியில் இருந்து 1997 il நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில் கடந்த 2003 இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அதில், ஹைதர் அலியின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இத்துடன் அவர் பணிநீக்கம் செய்த நாள் முதலான அவரது ஊதியத்தையும் ஹைதர் அலிக்கு
அளிக்கவும் அஸாம் ரைபிள் பிரிவினருக்கு உத்தரவு அளித்தது நினைவுகூரத்தக்கது.