Published : 23 Oct 2020 06:05 AM
Last Updated : 23 Oct 2020 06:05 AM

ஒருவருக்கு 2 டோஸ்கள் வழங்கும் வகையில் கரோனா தொற்று தடுப்பூசிக்கு ரூ.51 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு தயார் நிலையில் இருப்பதாக தகவல்

கரோனா தொற்று தடுப்பூசிக்கு மத்திய அரசு ரூ.51 ஆயிரம் கோடியை தயாராக வைத்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்துள்ள நிலையில், ஆறுதல் தரும் விஷயமாக தினசரி பாதிப்புகுறைந்துள்ளது. குணம் அடைவோர் எண்ணிக்கை 89.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொற்றின் உச்ச நிலையை இந்தியா கடந்துவிட்டதாகவும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வைரஸ் தொற்று முழுவதும் கட்டுக்குள் வரும் என்றும்நிபுணர் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகின்றன. தடுப்பூசி தயாரானவுடன் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்தசெவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதுபற்றி மத்திய அரசின் உயரதிகாரிகள் நேற்று கூறியதாவது:

700 கோடி டாலர்

தடுப்பூசிக்கு மத்திய அரசு 700 கோடி டாலர் (சுமார் ரூ.51 ஆயிரம் கோடி) ஒதுக்கியுள்ளது. இத்தொகை வரும் மார்ச் 31-ம் தேதியுடன் முடியும் நடப்பு நிதியாண்டிலேயே ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகைக்கு பிறகும் ஏற்படும் கூடுதல் செலவுக்கு நிதி ஒதுக்குவதில் அரசுக்கு எவ்வித பிரச்சினையும் இருக்காது. 130 கோடி மக்களுக்கும் தடுப்பூசி அளிப்பது உறுதி செய்யப்படும்.

கரோனா தடுப்பூசிக்காக ஒரு நபருக்கு அனைத்து செலவும் சேர்த்து 6 முதல் 7 டாலர் வரை (சுமார் ரூ.450 முதல் ரூ.550 வரை) செலவிட வேண்டியிருக்கும் என மத்திய அரசு கணக்கிட்டுள்ளது. முதல் டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் என ஒருவருக்கு 2 முறைதடுப்பூசி போடப்படும். இதன்படி தடுப்பூசிக்கான செலவு மட்டும் ஒரு நபருக்கு 2 டாலர் (ரூ.150)செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர அதனை இருப்பு வைத்தல், போக்குவரத்து, கட்டமைப்பு மற்றும் பிற தேவைகளுக்காக ஒரு நபருக்கு 4 முதல் 5 டாலர் வரை செலவிட வேண்டியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் தடுப்பூசி நாடு முழுவதும் விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்ய, அதனை இருப்பு வைப்பதற்கு தேவையான குளிர்பதன வசதி எங்கெங்கு உள்ளது என்பதை கண்டறியும் விரிவான பணியை மத்திய அரசு அண்மையில் தொடங்கியுள்ளது.

நிபுணர் குழுவினர் பேச்சு

இதுதொடர்பாக மருந்து உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் துறை தொடர்பான அரசு, தனியார் நிறுவனங்களுடன் நிபுணர் குழுவினர் பேசி வருகின்றனர். தாலுகா அளவில் மருந்தை இருப்பு வைக்கவும், விநியோகிக்கவும் குளிர்பதன வசதிகளை கண்டறிய ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களுடனும் அதிகாரிகள் பேசி வருகின்றனர்.

அதேவேளையில் கரோனா தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள சுமார் 30 கோடி பேரை அடையாளம் காணும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முன்னுரிமை பயனாளிகளான இந்த 30 கோடி பேரில் கரோனா முன்களப் பணியாளர்களான மருத்துவ ஊழியர்கள், துப்புரவு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினரும் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. முதல் டோஸ், பிறகு பூஸ்டர் டோஸ் என இவர்களுக்கு 60 கோடி டோஸ்கள் வழங்கப்பட உள்ளன. தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் இப்பணி உடனடியாகத் தொடங்க உள்ளது.

3 தடுப்பூசிகள்

இந்தியாவில் 3 தடுப்பூசிகள் தற்போது மனித சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைத்து உருவாக்கிய தடுப்பூசி, இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது. இதற்கான பரிசோதனையை இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் மேற்கொண்டு, ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தடுப்பூசியை தயாரிக்க உரிமம் பெற்றுள்ளது. இரண்டு கட்டப் பரிசோதனைகளை அந்தநிறுவனம் ஏற்கெனவே முடித்துவிட்டது.

இந்நிலையில் புனேவில் உள்ளசசூன் அரசு பொது மருத்துவமனையில் 3-ம் கட்ட பரிசோதனையை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் 3-ம் கட்ட பரிசோதனை விவரங்கள் தெரியவரும் என மத்திய அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x