11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

ரயில்வே துறையில் பணியாற்றும் 11.58 லட்சம் கெசட்டட் அல்லாத ஊழியர்களுக்கு 2019-20 ஆம் ஆண்டில் 78 நாட்கள் ஊதியத்துக்கு இணையான போனஸாக வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

உற்பத்தி அடிப்படையிலான ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த போனஸுக்காக ரூ.2,081.68 கோடியை மத்திய அரசு ஒதுக்க உள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி அடிப்படையில் 78 நாள் ஊதியத்துக்கு இணையாக போனஸ் வழங்க ரயில்வே அமைச்சகம் வழங்கிய பரிந்துரையை மத்திய அமைச்சரவை நேற்று ஏற்றுக்கொண்டது.

இதன்படி ரயில்வேயில் உள்ள ஆர்பிஎஃப், ஆர்பிஎஸ்எஃப் ஊழியர்கள் தவிர்த்து, அனைத்து கெசட்டட் அல்லாத ஊழியர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். ஏறக்குறைய 11.58 லட்சம் ஊழியர்கள் இதில் பயன் பெறுவார்கள்.

உற்பத்தி அடிப்படையிலான ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த போனஸுக்காக ரூ.2,081.68 கோடியை மத்திய அரசு ஒதுக்க உள்ளது.

இந்த போனஸ் பெறுவதற்கு கெசட்டட் அல்லாத ஊழியர்களின் தகுதி என்பது மாத ஊதியம் ரூ.7 ஆயிரமாக இருத்தல் வேண்டும். இதன்படி அதிகபட்சமாக போனஸ் தொகையாக ஒரு ஊழியர் 78 நாட்கள் ஊதியமாக ரூ.17,951 பெறுவார்.

இந்தத் தொகை அனைத்தும் கெசட்டட் அல்லாத ஊழியர்களுக்கு தசரா பண்டிகைக்கு முன்பே அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். இந்த போனஸ் தொகை ஊழியர்களுக்கு ஊக்கத்தை அளித்து இன்னும் சிறப்பாகப் பணியாற்ற உதவி புரியும்.

இவ்வாறு ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுட்டுமல்லாமல் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்தத் தொகையால் அவர்கள் செலவு செய்யும் அளவு அதிகரிக்கும். இதனால் சந்தையில் தேவையின் அளவும், நுகர்வின் அளவும் அதிகரிக்கும்.

முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கும் பண்டிகைக் கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் முன்பணமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. அந்தத் தொகை ஊதியத்தில் மாதம் ரூ.ஆயிரம் வீதம் 10 மாதங்கள் பிடித்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், பண்டிகைக் காலத்தில் செலவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கெசட்டட் அல்லாத மத்திய அரசின் 3.67 லட்சம் ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in