

ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்தவுடன் பிஹார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று பிஹார் மாநில தேர்தல் வாக்குறுதியில் முதல் வாக்குறுதியாக பாஜக தெரிவித்துள்ளது.
பிஹார் மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 28ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 3ம் தேதியும், 3-ம் கட்டம் 7-ம் தேதியும் நடக்கிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
முதல் கட்டமாக வரும் 28-ம்தேதி 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மகாபந்தன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. சிராக் பாஸ்வானின் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
ஏற்கெனவே காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட நிலையில் பாஜக இன்னும் வெளியிடாமல் இருந்து. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாட்னாவில் இன்று ஊடகங்களைச் சந்தித்து தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊடகங்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்தவுடன், கரோனா தடுப்பு மருந்து முழுவீச்சில் தயாரிக்கத் தொடங்கிய உடன், பிஹார் மக்கள் ஒவ்வொருவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும். இதுதான் பாஜகவின் முதல் தேர்தல் வாக்குறுதியாகும்.
பிஹார் மாநிலத்தில் பாஜக தலைமையில் ஆட்சிக்கு வந்தபின் அடுத்த 5 ஆண்டுகளில் 19 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். உயர்கல்வி மற்றும் பள்ளிக்கூடங்களில் அடுத்த ஆண்டில் 3 லட்சம் ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். சுகாதாரத்துறையில் ஒரு லட்சம் பேருக்கு அடுத்த ஆண்டில் வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்.
30 லட்சம் ஏழைகளுக்கு குடிசை வீடுகள் அகற்றப்பட்டு கான்க்ரீட் வீடுகள் கட்டித் தரப்படும். புதிதாக தகவல் தொழில்நுட்ப முனையம் உருவாக்கித் தரப்படும், 13 உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.
புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகள்அனைத்தும் இந்தி மொழியில் பயிற்றுவிக்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை பருப்பு வகைகளுக்கும் நீட்டிக்கப்படும்.
பிஹார் மாநில மக்கள் அனைவரும் அரசியல் ரீதியாக முழுமையான தகவல் அறிந்தவர்களாக, உணர்வுப்பூர்வமாக இருப்பவர்கள். அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளை அறிந்தும், புரிந்து கொள்ளும் திறமை உடையவர்கள். எங்கள் தேர்தல் வாக்குறுதியில் எந்த சந்தேகம் எழுந்தாலும் அதை நிவர்த்தி செய்து, அதை நிறைவேற்றவும் செய்வோம்.
மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருந்தவரை பொருளாதார வளர்ச்சி இல்லை. ஆனால், நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபின் ஜிடிபி வளர்ந்துள்ளது
மாநிலத்தில் ஒரு கோடி பெண்கள் சுயமாக ஊதியம் ஈட்டுவதற்கான வழிகள் ஆய்வு செய்யப்படும். 9-ம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் அரசு சார்பில் படிப்பதற்கா டேப்ளட் வழங்கப்படும்
இவ்வாறு சீதாராமன் தெரிவித்தார்.