

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் ஆகியோர் மீது கரோனா விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய குவாலியர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது இரு தலைவர்களும் கரோனா விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டத்தைச் சேர்த்து, சமூக விலகலைப் பின்பற்றாமல் செயல்பட்டதால் இந்த உத்தரவை குவாலியர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஷீல் நாகு, ஆர்.கே.ஸ்ரீவஸ்தவா ஆகியோர் பிறப்பித்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் காலியாக இருக்கும் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 3-ம் தேதி இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியினரும், பாஜகவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் குவாலியர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கடந்த 5-ம் தேதி குவாலியரின் மோடி ஹவுஸ் அருகே மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் யாரும் கரோனா விதிகளைப் பின்பற்றவில்லை. சமூக விலகலைக் கடைப்பிடிக்கவில்லை.
அதேபோல, தாதியா மாவட்டத்தில் உள்ள பாந்தர் நகரில் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் மக்கள் யாரும் கரோனா விதிகளைப் பின்பற்றவில்லை. இது தொடர்பாக புகார் அளித்தும் இருவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. கரோனா விதிகளை மீறிய இரு தலைவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஷீல் நாகு, ஆர்.கே.ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
“மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆகிய இருவர் மீதும் தாதியா, குவாலியர் மாவட்ட ஆட்சியர்கள் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, பிடி ஆணையின்றி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தவும் உத்தரவிடுகிறோம்.
அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டத்துக்குச் செல்லும்போது எத்தனை பேர் பங்கேற்கிறார்கள், சமூக விலகலைப் பின்பற்றுகிறார்களா, கரோனா விதிமுறைகளை மதிக்கிறார்களா என்பதை இடைத்தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். முறைப்படி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைக் கூட்ட தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளதா என்பதை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள், எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைக் கணக்கிட்டு வருவோரின் இரு மடங்காக முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றுக்கான பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் டெபாசிட் செய்ய வேண்டும். தேர்தலில் வேட்புமனுத் தாக்கலின் போது வரும் வேட்பாளர்கள் உடன்வருவோர் அனைவருக்கும் அவரின் செலவிலேயே முகக்கவசம், சானிடைசர் வசதியை அளிக்க வேண்டும்”.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.