

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி கிரிக்கெட்டில் சூப்பர் ஹிட் கூட்டணியான சேவாக்-சச்சின் கூட்டணி போன்ற சூப்பர் ஹிட் கூட்டணி என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
நிதிஷ் குமார் தலைமையில் பிஹாரின் முன்னேற்றம் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் மோடி மீது எந்த ஒரு ஊழல் கறையும் இல்லை என்றார் ராஜ்நாத் சிங்.
பிஹார் பாகல்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராஜ்நாத் சிங் கூறியதாவது:
லாலு தலைமை ஆட்சியை 15 ஆண்டுகாலம் மக்கள் பார்த்தனர், நிதிஷ்-பாஜக கூட்டணி ஆட்சியையும் மக்கள் பார்த்தார்கள். இந்த இர்ண்டு அரசுகளின் செயல்பாடுகளை ஒப்பிட முடியாது. தேஜகூ ஆட்சியில் மாநிலமே மாறிவிட்டது.
நிதிஷ் குமார் பிஹாருக்காக அனைத்தையும் செய்திருக்கிறார் என்று நான் கூறவில்லை. அவர் செய்த செயல்கள் விவாதத்துக்குரியவை. ஆனால் அவரின் நேர்மையை சந்தேகிக்க முடியாது.
கல்வான் பள்ளத்தாக்கில் என்ன ஆனது என்பதை அறிவீர்கள், சீனா தாக்குதலில் பிஹார் ராணுவ வீரர்கள்தான் உயிர்த்தியாகம் செய்து தாய்நாட்டின் கவுரவத்தைக் காப்பாற்றினர். அவர்களுக்குத் தலைவணங்குகிறேன், என்றார் ராஜ்நாத் சிங்.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிஹாரில் 3 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு அக்.28ம் தேதி நடைபெறுகிறது.