

கர்நாடக மாநிரம் கலபுரகி,யாதகிரி, ராய்ச்சூர், விஜயாப்புரா, பெலகாவி, பாகல்கோட்டை, பீதர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணா, பீமா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந் துள்ளது.
இந்நிலையில் பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி, மங்களூரு ஆகிய இடங்களிலும் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. பெங்களூருவில் நேற்று விடியவிடிய கொட்டிய மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பெல்லாரியில் நேற்று காலையில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. பிராப்பூர் கிராமத்தில் காயப் போட்டு இருந்த மிளகாயை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் மின்னல் தாக்கி சம்பவஇடத்திலே உயிரிழந்தனர். இதேபோல பெலகாவி அருகேயுள்ள சவுந்தத்தி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 2 பெண்கள் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். கதக், ஹாவேரி, ஹூப்ளி ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். ஹூக்கேரியில் கண்ட் தள்வாய் என்பவருக்கு சொந்தமான 47 ஆடுகள் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தன.
எடியூரப்பா ஹெலிகாப்டரில்..
கர்நாடக முதல்வர் எடியூ ரப்பா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கலபுரகி, விஜயாப்புரா, யாதகிரி, ராய்ச்சூர் ஆகிய 4 மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பின்னர் 4 மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் எடியூரப்பா காணொலிமூலம் ஆலோசனை நடத் தினார்.
அப்போது, மழை வெள்ளத்தால் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் அடைந்ததாக எடியூரப்பா தெரிவித்தார்.