

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாய்ரா பானுவை அவரது கணவர் 2014-ம் ஆண்டில் உடனடி முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தார். இதை எதிர்த்து சாய்ரா பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து, உடனடி முத்தலாக் செல்லாது என்றும் அதைத் தடுக்க சட்டம் கொண்டுவருமாறும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, சாய்ரா பானு கடந்த 10-ம் தேதி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், உத்தராகண்ட் மாநில மகளிர் ஆணையத்தின் துணைத் தலைவராக சாய்ரா பானு நியமிக்கப்பட்டுள்ளார். இது இணை அமைச்சர் அந்தஸ்திலான பதவியாகும். சாய்ரா பானுவுடன் மேலும் இருவரும் மகளிர் ஆணையத்தின் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் திரிவேந்திர சிங் ரவத் கூறும்போது, ‘‘மாநில மகளிர் ஆணையத்தில் காலியாக இருந்த 3 துணைத் தலைவர் பதவிகளுக்கு சாய்ரா பானு உட்பட 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது உத்தராகண்ட் மாநில பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நவராத்திரி பரிசு. தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பதவி மூலம் சாய்ரா பானு உள்ளிட்ட மூவரும் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளில் சிறப்பாக செயல்படுவார்கள். நிலுவையில் உள்ள வழக்குகளும் விரைவில் தீர்க்கப்படும்’’ என்றார்.