

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாட்டின் எல்லைகள் வலுப்படுத் தப்படும் என்று மத்திய உள்துறை அமித்ஷா உறுதி கூறினார்.
கடந்த 1959-ம் ஆண்டில் லடாக்கின் ஹாட் ஸ்பிரிங் பகுதியில் சீனப் படையினருக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎப் வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும்அக்டோபர் 21-ம் தேதி தேசியகாவலர் தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் நேற்று நடைபெற்ற வீர வணக்க நிகழ்ச்சியில் உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
பயங்கரவாதம், கள்ள நோட்டு, போதைப் பொருள் கடத்தல், சைபர் குற்றங்கள், ஆயுதக்கடத்தல், ஆட்கடத்தல் என காவல் துறை தனது பணியில் புதிய சவால்களையும் புதிய பரிமாணங்களையும் எதிர்கொள்கிறது. கடந்த 20 - 30 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள புதிய பரிமாணங்களுக்கு ஏற்ப போலீஸ் படையை தயார் செய்வது சவாலான பணியாக உள்ளது. காவல் துறையை நவீனப்படுத்த விரிவான திட்டத்தை நாங்கள்தயாரித்துள்ளோம். வரும் காலங்களில் இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில் காவல்துறையை மத்திய அரசு தயார்படுத்தும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் எல்லைகள் வலிமைப்படுத்தப்படும். இதற்கான விரிவான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. நமது துருப்புகளின்கண்காணிப்பும் தொழில்நுட்பமும் ஒருங்கிணைவதன் மூலம் நமது எல்லைகளை சிறப்பாக பாதுகாக்க முடியும்.
கரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களில் ஒருவராக போலீஸார் தங்கள் உயிரை பணயம் வைத்துகாலநேரம் பார்க்காமல் பணியாற்றுகின்றனர். வரும் காலங்களில் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். போலீஸாருக்கான பயிற்சி மற்றும் வீட்டு வசதிதொடர்பான ஒரு திட்டப் பணியில்எனது அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் பெருமிதம்
தேசிய காவலர் தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், “சட்டம் ஒழுங்கை காப்பது முதல் கொடூரகுற்றங்களை தடுப்பது வரை, பேரிடர் மேலாண்மையில் உதவி செய்வது முதல் கரோனாவுக்கு எதிராக போரிடுவது வரை எந்தப் பணியாக இருந்தாலும் எவ்வித தயக்கமும் இன்றி நமது காவலர்கள் இயன்றவரை சிறப்பாக செயல்படுவார்கள். குடிமக்களுக்கு உதவுவதில் அவர்களின் அக்கறை குறித்துநாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.