

நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரே எம்பியான டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி 334 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் தனிப்பெரும்பான்மையாக பாஜக வுக்கு 282 தொகுதிகள் கிடைத் துள்ளன. இதனால் மோடியின் அமைச்சரவையில் பாஜக உறுப்பினர்களுக்கு மட்டும் இடம் கிடைக்கும் எனக் கருதப்பட்டு வந்தது.
ஆனால் மாநிலங்களவையில் பாஜகவிற்கு பலம் குறைந்து இருக்கும் காரணத்தாலும் பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருப்ப தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பேசிய மோடி, மத்தியில் ஆட்சி நடத்த அனைத்து கட்சிகளின் ஆதரவு தேவை என தெரிவித்தார். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியபோது, மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கப்படும் என்று கூறினார்.
மோடியுடன் பாஸ்வான் சந்திப்பு
பாஜக கூட்டணி கட்சியான லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், நாகாலாந்து முதல்வரும் நாகா மக்கள் முன்னணியின் தலைவருமான நெய்பியூ ரியோ ஆகியோர் மோடியை டெல்லியில் ஞாயிற்றுக் கிழமை சந்தித்துப் பேசினர். இவர்களில் பாஸ்வான் மத்திய அமைச்சராகப் பதவி வகித்துள் ளார். அடுத்த இருநாட்களில் மேலும் பல கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மோடியைச் சந்திக்க உள்ளனர்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவி அளிப்பதில் சர்ச்சைகள் எழுந்திருப்பதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து பாஜகவின் தேசிய அரசியல் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறியபோது, ‘சிபிஐ வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரான அன்புமணியை அமைச்சராக்கினால், மோடி அரசு விமர்சனத்துக்குள்ளாகும். பாஜகவில் யாராவது தவறு செய்தாலே தண்டிக்க இருப்ப தாக கூறிய மோடி, கூட்டணி யில் ஏற்பாரா? எனவே குறைந்த பட்சம் மோடி தன் ஆரம்ப காலங்களிலாவது அன்புமணி போல் வழக்கில் சிக்கியவர்களை அமைச்சராக்க மாட்டார்’ என தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி மத்தியப் பிரதேசத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக 2012-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.