Published : 21 Oct 2020 10:06 PM
Last Updated : 21 Oct 2020 10:06 PM

குறைந்த விலையில் கரோனா தடுப்பூசி: ஹர்ஷ வர்தன் வலியுறுத்தல்

கோவிட்-19 தடுப்பூசியை குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகம் செய்வதே ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய முக்கிய பணியாக அமைந்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் கூறினார்.

மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் உலக வங்கி-சர்வதேச நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்தில் மெய்நிகர் வாயிலாக இன்று கலந்துகொண்டு உரையாற்றினார்.

"கோவிட்-19 தடுப்பூசிகள் மற்றும் ஆரம்ப சுகாதார விநியோக அமைப்பில் முதலீடு" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், அனைவரின் ஒத்துழைப்புடன் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது என்று கூறினார்.

"கோவிட் பரவல், இடையூறை அளித்துள்ள போதும், அதிலிருந்து நாம் மீண்டுவரவும், எதிர் காலத்திற்குத் தயாராவதற்கும் அது நமக்குக் கற்றுத் தந்துள்ளது", என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட் 19 தடுப்பு முயற்சியில் தனியார் துறையின் பங்கினை பாராட்டிய அமைச்சர், கோவிட் பரவலுக்கு எதிரான இந்த போராட்டத்தில், தனியாரின் புதிய கண்டுபிடிப்புகள், திறமை ஆகியவையும் பெரும் உதவியாக இருந்து வருகிறது. பீபிஈ, என்95 முகக் கவசங்கள், பிராண வாயு, செயற்கை சுவாச கருவிகள், பரிசோதனைக் கருவிகள் போன்றவை அதிவிரைவில் தயாரிக்கப்பட்டு, போதுமான கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ உள்கட்டமைப்பு அபரிமிதமான வளர்ச்சி அடைந்து, கடந்த மார்ச் மாதம் ஒரு ஆய்வகத்திலிருந்து, இன்றைய தேதியில் 2000 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவை தனியார் துறையைச் சார்ந்தது. இதேபோல் தீவிர சிகிச்சை பிரிவு வசதிகள் மற்றும் தனிமை படுத்தப்படும் மையங்களுக்கும் இது பொருந்தும்", என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த அசாதாரண சூழலால் உலகமே பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில், இந்தியா, கோவிட்டை கட்டுப்படுத்த, மெய்நிகர் தொடர்பான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆரோக்கிய சேது செயலி, தொற்று பரவ சாத்தியமுள்ள தொகுப்புகளை ட்ராக்கிங் மூலம் கண்டறியும் இதிஹாஸ் தொழில்நுட்பம், பரிசோதனைகளை மேற்கொள்ளவும், நோய் தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் குறித்த தகவல்களை அறியவும், கோவிட் சார்ந்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய ஆர்டி-பிசிஆர் செயலி போன்றவற்றை பயன்படுத்தி வருவதாக அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

அனைவருக்கும் சுகாதார சேவையைக் கொண்டு சேர்க்கும் வகையிலும், அசாதாரண சூழலை சமாளிக்கும் வகையிலும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர், "272 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சிறப்பு பொருளாதார மற்றும் விரிவான தொகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்சார்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் ஆகும். இதன் மூலம் பொது சுகாதாரம் மற்றும் சுகாதார சீர்திருத்தங்களுக்கான முதலீடுகளை அதிகரிப்பதுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற சூழலுக்கு இந்தியாவை தயார்படுத்தவும் முடியும்" என்று கூறினார்.

கோவிட்-19 தடுப்பூசியை குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகம் செய்வதே ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய முக்கிய பணியாக அமைந்துள்ளது என்றும், தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து 3 இந்திய மருந்து நிறுவனங்கள், தடுப்பூசியின் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x