

வரும் பண்டிகை காலத்தில் செலவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கெஜடட் அல்லாத மத்திய அரசின் 3.67 லட்சம் ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி போனஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி கரோனாவுக்கு முன்பிருந்தே குறைந்து வந்தது. நுகர்வோர் செலவு செய்யும் அளவு குறைந்து வருகிறது, பொருளாதாரத்தில், தேவையின் அளவும், நுகர்வின் அளவும் குறைந்து வருகிறது. இதை உயர்த்த மத்திய அரசு அதிகமான வரிச்சலுகைகளை, ஊக்கத்தொகைகளை வழங்கிட வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், திடீரென கரோனா வைரஸ் தாக்கம் உருவாகி, அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வர்த்தகம், கடைகளில் வியாபாரம் பாதித்து, பொருளாதாரத்தில் தேவை, நுகர்வு பலத்த அடிவாங்கியது. நுகர்வோர் செலவு செய்யும் அளவு குறையத் தொடங்கியது.
இதையடுத்து, நுகர்வோர் செலவு செய்யும் அளவை அதிகரித்தால்தான் பொருளாதார வளர்ச்சி தூண்டப்படும் என்பதை அறிந்து மத்திய அரசு சமீபத்தில் பண்டிகை கால முன்பணத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்தது.
அதன்படி அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் பண்டிகை கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் முன்பணமாக வழங்கப்படும். அந்த தொகை ஊதியத்தில் மாதம் ரூ.ஆயிரம் வீதம் 10 மாதங்கள் பிடித்தக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஊடகங்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ 2019-20ம் ஆண்டுக்கான உற்பத்தி அடிப்படையிலான, உற்பத்தி அடிப்படையில் இல்லாத கணக்கீட்டின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்(ஊக்கத்தொகை) வழங்க மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, மத்திய அரசில் கெஜட்டட் அல்லாத ஊழியர்கள் 30.67 லட்சம் பேருக்கு ரூ.3,737 கோடி போனஸாக அறிவிக்கப்படுகிறது. பண்டிகை காலத்தில் நடுத்தர குடும்பத்தினர் செலவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த தொகை வழங்கப்படுகிறது. இந்த போனஸ் தொகை ஊழியர்களுக்கு நேரடியாக வங்கிக்கணக்கின் மூலம் விஜயதசமி பண்டிகைக்கு முன்பாகவே வழங்கப்படும்.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.