மகாராஷ்டிர அரசியலில் திருப்பம்: பாஜகவிலிருந்து விலகினார் ஏக்நாத் கட்ஸே: தேசியவாத காங்கிரஸில் சேர முடிவு

பாஜக தலைவர் ஏக்நாத் கட்ஸே : கோப்புப்படம்
பாஜக தலைவர் ஏக்நாத் கட்ஸே : கோப்புப்படம்
Updated on
2 min read

மகாராஷ்டிராவில் பாஜக மூத்த தலைவர் ஏக்நாத் கட்ஸே அந்தக் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார். வரும் வெள்ளிக்கிழமையன்று தேசியவாத காங்கிரஸில் இணைகிறார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவின் வடக்குப் பிராந்தியத்தில் செல்வாக்கு மிக்கத் தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்ஸே. இவரின் மருமகள் ரக்ஸா கட்சே பாஜகவின் எம்.பி.யாக இருந்து வருகிறார். ஏக்நாத் கட்ஸேயின் விலகலால், வடக்கு மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு சற்று பின்னடைவு ஏற்படக்கூடும்.

மாநில பாஜகவுடன் கடந்த 2 ஆண்டுகளாகவே ஏக்நாத் கட்ஸே மிகுந்த அதிருப்தியுடன் இருந்து வந்தார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் அமைச்சராகஇருந்த ஏக்நாத் கட்ஸே மீது கடந்த 2016-ம் ஆண்டு நில அபகரிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு வந்ததையடுத்து கட்ஸே பதவி விலகினார்.

ஆனால், எந்தவிதமான குற்றச்சாட்டும் கட்ஸே மீது நிரூபிக்கப்படவில்லை. தன் மீது வெளிப்படையாக விசாரணைக் கமிட்டி அமைத்து விசாரிக்க முதல்வர் பட்னாவிஸிடம் கட்ஸே கோரியிருந்தார், ஆனால் அதை பட்னாவிஸ் ஏற்கவில்லை.

இதனால் பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மற்றும் பட்னாவிஸுடன் மனக்கசப்புடன் ஏக்நாத் இருந்து வந்தார். இந்த சூழலில் பாஜகவில் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஏக்நாத் கட்ஸே விலகியுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் கட்ஸே இணையவுள்ளார்.

ஜெயந்த் பாட்டீல்
ஜெயந்த் பாட்டீல்

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸின் மாநிலத்தலைவரும், மகாராஷ்டிர நீர்வளத்துறை அமைச்சருமான ஜெயந்த் பாட்டீல் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “பாஜக தலைவர் ஏக்நாத் கட்ஸே அந்த கட்சியிலிருந்து விலகிவிட்டார். மறைந்த கோபிநாத் முன்டேவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் உடையவர் ஏக்நாத் கட்ஸே. வரும் வெள்ளிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.

அவரின் வருகை நிச்சயம் தேசியவாத காங்கிரஸை வலுப்படுத்தும். பாஜகவில் பல ஆண்டுகளாக கட்ஸேவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே மக்கள் பார்க்கிறார்கள். மூத்த வீரர் கட்ஸே ஏன் விலகினார் என்று பாஜக சுயபரிசோதனை செய்ய வேண்டும். தேசியவாத காங்கிரஸில் கட்ஸேவுக்கு அளிக்கும் பதவி குறித்து கட்சித் தலைமை முடிவு எடுக்கும்.

கட்ஸேவுடன் ஏராளமான தொண்டர்கள் தேசியவாத காங்கிரஸில் இணைய காத்திருக்கிறார்கள். பல எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இப்போதுள்ள சூழலில் கரோனா வைரஸ் பரவல் காலத்தில் இடைத்தேர்தல் வருவதை நாங்கள் விரும்பவில்லை. கடந்த 8 நாட்களில் பல பாஜக தலைவர்களுடன் பேசினேன். பலரும் எங்கள் கட்சியில் இணைய ஆர்வமாக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in