

மக்களுக்குச் சேவை ஆற்றுவதில் காவலர்கள் எப்போதுமே சிறந்ததை வழங்குகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. 1959இல் இதே நாளில் லடாக்கில் சீனத் துருப்புகளுடன் சண்டையிட்டபோது, உயிர்த்தியாகம் செய்த சிஆர்பிஎஃப் ஊழியர்கள் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி இந்த நாள் காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
புதுடெல்லியில் அமைந்துள்ள தேசியக் காவலர் நினைவிடத்தில் இன்று காலை உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
''சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதில் இருந்து, கொடூரமான குற்றங்களைக் களைவது வரை, பேரிடர் மேலாண்மையில் உதவி செய்வது முதல் கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவது வரை, மக்களுக்குத் தங்கள் சேவையை வழங்குவதில் நம் காவல்துறை ஊழியர்கள் எப்போதும் தயக்கமின்றி தங்களால் ஆன சிறந்ததை வழங்குகிறார்கள். நாட்டு மக்களுக்கு உதவும் அவர்களின் ஆர்வம் மற்றும் தயார் நிலை குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம்.
வீர வணக்க நாள் என்பது இந்தியா முழுவதும் உள்ள காவல்துறை ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவிப்பதாகும். கடமையின்போது உயிர்த் தியாகம் செய்த அனைத்துக் காவல்துறையினருக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தியாகமும் சேவையும் எப்போதும் நம் நினைவில் இருக்கும்''.
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.