Last Updated : 21 Oct, 2020 06:49 AM

 

Published : 21 Oct 2020 06:49 AM
Last Updated : 21 Oct 2020 06:49 AM

கனமழையால் 126 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்; வட கர்நாடகாவில் 37 ஆயிரம் பேர் மீட்பு: ராணுவம், பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரம்

வட கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் 126 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு சிக்கிய 37 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு வெளியேற்றியுள்ளனர். இதில் 31 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவிலும், அதையொட்டிய வட கர்நாடகாவின் 8 மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இத னால் அங்குள்ள நீர் நிலைகள் அனைத் தும் நிரம்பியதால் கிருஷ்ணா, பீமா ஆகிய இரு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், விஜயாப்புரா ஆகிய மாவட்டங்களில் கிருஷ்ணா, பீமா ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

4 மாவட்டங்களில் 126 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் விளைநிலங்களில் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டி ருந்த வெங்காயம், மாதுளை, நெல் உள் ளிட்ட பயிர்கள் முழுவதுமாக சேதமடைந் துள்ளன. ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் வீடுகளிலும் நீர் தேங்கியது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற முடியாமல் உயரமான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்பு படையினர் ஹெலி காப்டர், பிளாஸ்டிக் படகுகள் மூலம் மீட்டனர். பின்னர் அவர்கள் ஆங் காங்கே அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக் கப்பட்டனர். இந்த மழை வெள்ளத்துக்கு 10-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளும் பலியாகியுள்ளன.

மேலும் நேற்று மாலை வரை 126 கிராமங்களில் இருந்து 37,330 பேரை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். இதில் 31,057 பேர் 185 முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளதாக கர்நாடக இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வட கர்நாடகாவில் வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங் களின் ஆட்சியர்களுடன் முதல்வர் எடி யூரப்பா நேற்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற் கொள்ள அவர் உத்தரவிட்டார். வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று நேரில் ஆய்வு செய்யவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

வெள்ளம் பாதித்த தெலங்கானாவுக்கு டெல்லி அரசு ரூ.15 கோடி நிதியுதவி

புதுடெல்லி: தெலங்கானா மாநிலத்தில் கடந்த 117 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஹைதராபாத் நகரம் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமராவ் தெரிவித்தார். சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலங்கானா வெள்ள நிவாரணப் பணிகளுக்காக டெல்லி அரசு சார்பில் ரூ.15 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ‘‘வெள்ளத்தால் ஹைதராபாத் நகரம் பேரழிவைச் சந்தித்துள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் தெலங்கானா சகோதர, சகோதரிகளுக்கு டெல்லி மக்கள் துணை நிற்பார்கள். நிவாரணப் பணிகளுக்காக டெல்லி அரசு சார்பில் தெலங்கானாவுக்கு ரூ.15 கோடி நிதியுதவி அளிக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x