

பிரதமர் மோடி மிக முக்கியமான தகவலை நாட்டு மக்களுக்கு பகிர்ந்து கொள்ள இருக்கிறார், நாட்டின் நலன் கருதி மக்கள் அனைவரும் இந்த உரையை கேட்க வேண்டும் என லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதன் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அவ்வப்போது உரையாற்றி வருகிறார்.
தற்போது பருவமழை மற்றும் தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. ஊரடங்கு தளர்வு மற்றும் பண்டிகைகாலம் போன்றவற்றால் இந்தியாவில் கரோனாவின் 2-வது அலை பரவலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்தநிலையில் நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் ‘‘இன்று மாலை 6 மணிக்கு எனது சக குடிமக்களிடம் ஒரு செய்தியை பகிர உள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.
எதைப் பற்றி பேச இருக்கிறார் என்பதை அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘பிரதமர் மோடி மிக முக்கியமான தகவலை நாட்டு மக்களுக்கு பகிர்ந்து கொள்ள இருக்கிறார். நாட்டின் நலன் கருதி மக்கள் அனைவரும் இந்த உரையை கேட்க வேண்டும். பிஹார் தேர்தலில் போட்டியிடும் லோக் ஜனசக்தி வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் இருந்தவாறு மக்களுடன் சேர்ந்து பிரதமர் கூறப்போகும் மிக முக்கியமான தகவலை கேட்க வேண்டும். அதேசமயம் தங்கள் பகுதியில் போதுமான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.’’ எனக் கூறியுள்ளார்.