

ஹாத்ரஸ் மட்டுமல்ல உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து தலித் பெண்கள் மீது கடும் வன்முறையைச் செலுத்தி வருவதையடுத்து, ‘போதும், அனுபவித்த வரை போதும், பட்டதே போதும்’ என்ற முடிவுக்கு வந்த வால்மீகி என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த 236 பேர் இந்துமதத்திலிருந்து பவுத்த சமயத்தைத் தழுவினர்.
அக்டோபர் 14ம் தேதியன்று காஸியாபாத்தில் உள்ள கரேரா கிராமத்தில் 236 வால்மீகி சமுதாயத்தினர் பவுத்தம் தழுவினர். இந்த நாள் குறியீட்டு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது ஏனெனில் இதே நாளில் 64 ஆண்டுகளுக்கு முன்பாக 3,65,000 தாழ்த்தப்பட்ட மக்களுடன் பவுத்தம் தழுவினார் டாக்டர் அம்பேத்கர்.
இரண்டு நிகழ்வுகளிலுமே முக்கியத்துவம் வாய்ந்த வாசகம், ‘சாதி அடக்குமுறையிலிருந்து தப்பித்தல்’ என்பதாகவே இருந்தது.
கரேரா கிராமத்தில் உயர்சாதி இந்துக்களான சவுகான்கள் அதிகம். கரேராவில் 9,000 பேர் வசிக்கிறார்கள் என்றால் 5,000 பேர் சவுகான்கள். 2000 பேர் தலித் வால்மீகி சமூகத்தினர்.
பவுத்தத்திற்கு மாறிய இந்த வால்மீகி தலித் பிரிவினர், ஹாத்ரஸ் தலித் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவமும் அதனை மாநில அரசு கையாண்ட விதமும் தங்களை இந்த முடிவுக்கு மாற்றியதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
உயர் சாதி இந்துக்கள் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை, யோகி ஆதித்யநாத் அரசின் மீது தங்களுக்கு நம்பிக்கை போய் விட்டதாகவும் அவர்கள் அந்த ஆங்கில ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளனர்.
இந்த கிராமத்திலும் சாதிப்பிரிவினை பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிறது, வால்மீகிக்கள் இருக்கும் தெருவுக்கு சவுகான்கள் போகமாட்டார்கள் என்கின்றனர்.
இந்நிலையில் வால்மீகி தலித் சமுதாயத்தினர் பவுத்தத்தை தழுவியுள்ளனர்.