Published : 28 May 2014 09:21 AM
Last Updated : 28 May 2014 09:21 AM

கேபினட் அமைச்சர், இணை அமைச்சர் வேறுபாடு என்ன?

மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு), இணை அமைச்சர்கள் என்ற மூன்று பிரிவுகள் உள்ளன. இந்த மூன்று பிரிவுக்கும் முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. இவையல்லாமல் துணை அமைச்சர் என்ற அந்தஸ்தில் சிலரை நியமிக்கவும் சட்டம் இடம் தருகிறது. ஆனாலும் பெரும்பாலும் இந்தியாவில் அப்படி நியமிப்பதில்லை.

கேபினட் என்பது, 'மத்திய அரசுக்குள் ஒரு குட்டி அரசு' என்று சொல்லத்தக்க வகையில் சக்திவாய்ந்த உயர் அதிகார அமைப்பாகும். கேபினட்டில் முக்கியமான துறைகளின் அமைச்சர்கள் இருப்பார்கள். இந்த அமைச்சர்கள் பெரும்பாலும் மூத்தவர் களாகவும் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த அனுபவமும் அறிவும் வாய்க்கப்பெற்றவர் களாகவும் இருப்பார்கள். அரசியல், சட்டம், தொழில்நுட்பம், வேளாண்மை, வாணிபம், ராணுவம், வெளியுறவு, தொழில்துறை ஆகியவற்றில் தனிச் சிறப்பு பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் கேபினட் அமைச்சர்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளைத் தங்கள் வசம் வைத்திருப்பார்கள். அவர்களுடைய துறை பெரியதாக இருந்தால் ஒன்று அல்லது இரண்டு இணை அமைச்சர்களை உதவிக்கு அமர்த்திக்கொள்வார்கள்.

இணை அமைச்சர்களில் ‘தனிப்பொறுப்பு' உள்ளவர்களும் உண்டு. குறிப்பிட்ட சில துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நினைத்தால் அதை மட்டும் தனியாகப் பிரித்து, இணை அமைச்சரின் தனிப்பொறுப்பில் விடுவது உண்டு. சிவில் விமானப் போக்குவரத்து போன்ற துறைக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் வேண்டாம் என்று நினைத்தால் தனிப்பொறுப்பாக ஒரு இணை அமைச் சரிடம் தருவது உண்டு.

கேபினட் அமைச்சர்கள் சில வேளை களில், அவர்களுக்கென்று ஒதுக்கிய துறை போக, பிரதமரின் வேண்டுகோளின்பேரில் மற்றொரு துறையையும் கூடுதலாக வகிப்பதும் உண்டு. சக கேபினட் அமைச்சர் வெளிநாடு செல்லும்போதோ, உடல் நலக்குறைவால் சிகிச்சை பெறும்போதோ இப்படி கூடுதல் பொறுப்பை வகிப்பார்கள். அமைச்சரவையிலிருந்து யாராவது விலக நேர்ந்தால் தற்காலிக ஏற்பாடாக அந்தத் துறையை இன்னொரு அமைச்சரிடம் கூடுதல் பொறுப்பாகவும் தருவார்கள்.

கேபினட்டில் இடம் பெற்ற அமைச் சர்கள் மட்டுமே கேபினட் கூட்டங்களில் பங்கேற் பார்கள். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே, இணை அமைச்சர்கள் கேபினட் கூட்டங்களுக்கு விசேஷமாக அழைக்கப் படுவார்கள்.

கேபினட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அந்தந்தத் துறைக்கு உரிய அமைச்சர்கள் மட்டுமின்றி இதர அமைச்சர்களும் கருத்துகளைத் தெரிவிப் பார்கள். கேபினட் கூட்டத்தில் நடக்கும் விவாதங்களும் எடுக்கப்படும் முடிவுகளும் முறையாகப் பதிவு செய்யப்படும்.

இணை அமைச்சர்களில் தனிப் பொறுப்பு என்று அறிவிக்கப்படுகிறவர்கள் தங்களுடைய துறை தொடர்பான எல்லா முடிவுகளையும் அவர்களே எடுப்பார்கள். பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் அவர் கள் செயல்படுவார்கள்.

தனிப்பொறுப்பல்லாத இணை அமைச் சர்கள், தத்தமது துறையின் கேபினட் அமைச்சரின் வழிகாட்டலின்படி தங் களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வார்கள். இவர்களை 'அதிகாரம் இல்லாத அமைச்சர்கள்' என்று அரசியல் வட்டங்களில் கேலி செய்வார்கள். சில மூத்த அமைச்சர்கள் இணை அமைச் சர்கள் மீது நம்பிக்கை வைத்து, பொறுப்பு களை அளித்து நன்றாகத் தயார் செய்வார் கள். வேறு சிலரோ அவர்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். சில இணை அமைச்சர்கள் தாங்கள் உட்கார மேஜை, நாற்காலிகூட இல்லை என்று கேபினட் அமைச்சர்களிடமே முறையிட்டதும் உண்டு.

நாடாளுமன்றக் கூட்டங்களில் கேபினட் அமைச்சர் அவைக்கு வர முடியாத சந்தர்ப்பங்களில், இணை அமைச்சர்கள், கேள்விகளுக்குப் பதில் அளிப்பது உண்டு. அரசியல் காரணத்துக்காக ஒருவருக்கு கேபினட் அந்தஸ்து தரப்படுவதும் அவருக்காக அந்தத் துறையின் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பை இணை அமைச்சரே மேற்கொள்வதும் சமீபத்தில்கூட நடந்திருக்கிறது. நாடாளு மன்றத்தில் கேள்வி நேரத்தில் பதில் சொல்லும் பொறுப்பை கேபினட் அமைச் சருக்குப் பதிலாக இணை அமைச்சரே சொல்ல நேர்ந்திருக்கிறது.

இணை அமைச்சர்கள் துறைக்கும் கேபினட் அமைச்சருக்கும் பாலமாக இருந்து செயல்படுவார்கள். நாடாளு மன்றப் பணிகளிலும் அவருக்கு உதவுவார் கள். அதன் மூலம் அவர்களும் நிர்வாகப் பயிற்சியைப் பெறுவார்கள்.

இணை அமைச்சர்களாக நியமிக்கப் படுகிறவர்கள் பெரும்பாலும் இளைஞர் களாகவோ, அமைச்சர் பொறுப்புக்குப் புதியவர்களாகவோ இருப்பார்கள்.

பிரதமர் அலுவலகத்தில் பணியாற்ற இணையமைச்சர் அந்தஸ்தில் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆட்சி யிலும் இப்படியொரு இணையமைச்சர் இருந்தார்.

நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் களில் (மக்களவை, மாநிலங்களவை) சுமார் 10% வரையிலான எண்ணிக்கையில் மத்திய அமைச்சரவை இருக்கலாம் என்று நிர்வாக சீர்திருத்தக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. அதே சமயம் மொத்தம் எத்தனை துறைகள் இருக்கலாம், எத்தனை கேபினட் அமைச்சர்கள் இருக்கலாம், எத்தனை இணை அமைச் சர்கள் இருக்கலாம் என்றெல்லாம் அது பரிந்துரைக்கவில்லை. இவை அனைத்தும் பிரதமரின் விருப்ப அதிகாரத்துக்கும் செல்வாக்குக்கும் உள்பட்டவை.

கேபினட் அமைச்சர்களைவிட இணை அமைச்சர்களுக்கு ஊதியம், படிகள், சிறப்புச் சலுகைகள் போன்றவை குறை வாகவே இருக்கக்கூடும். கேபினட் அமைச் சர்களுக்கு பங்களா, கார் போன்ற வசதிகளும் அதிகமாகவே இருக்கும். அரசியல்ரீதியாகவும் கேபினட் அமைச்சர் களுக்கு செல்வாக்கு அதிகம். இருப் பினும் இணை அமைச்சர்கள் நாடாளு மன்ற ஜனநாயகத்தின் இன்றிய மையாத அம்சமாகிவிட்டார்கள். கேபினட் அமைச் சர்களை அணுக முடியாதவர்கள் இணை அமைச்சர்களை எளிதில் அணுக முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x