Published : 20 Oct 2020 10:29 AM
Last Updated : 20 Oct 2020 10:29 AM

புதிய விவசாயச்சட்டங்களை பெரும்பான்மையான விவசாயிகள் எதிர்க்கின்றனர்: கருத்துக் கணிப்பில் தகவல் 

மக்களவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட விவசாயச்சட்டங்களை 50%க்கும் அதிகமான விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 35% விவசாயிகள் மட்டுமே இதனை ஆதரிக்கின்றனர்.

கேயான் கனெக்சன் இன்சைட்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் 16 மாநிலங்களில் இந்த ஆய்வை நடத்தியது. 40%க்கும் அதிகமான விவசாயிகள் மண்டி முறை முடிவுக்கு வந்து விடும் என்று அரசுக் கொள்முதல் போயே போய்விடும் என்றும் குறைந்தபட்ச ஆதார விலை முறை ஒழிந்து விடும் என்று அச்சம் தெரிவித்தனர்.

60% விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் கோரினர்.

பெரிய அளவில் எதிர்ப்பு இருந்தாலும் இந்த ஆய்வில் பதிலளித்த 44% பேர் மோடி அரசு விவசாயிகளுக்கு ஆதரவானது என்றும் 28% விவசாயிகளுக்கு எதிரானது என்றும் கருத்துத் தெரிவித்தனர்.

மோடி அரசு யாரை ஆதரிக்கிறது என்ற கேள்விக்கு 35% விவசாயிகளை ஆதரிப்பதாகவும் 30% பேர் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களையும் தனியார் நிறுவனங்களையும் ஆதரிப்பதாகவும் 15% பேர் அரசு இடைத்தரகர்களையும் புரோக்கர்களையும் ஆதரிப்பதாக கருத்து தெரிவித்தனர்.

கேயான் கனெக்‌ஷன் 5,000 விவசாயிகளை நேருக்கு நேர் சந்தித்து கருத்துக் கணிப்பில் ஈடுபட்டது. இதில் முக்கால்வாசி விவசாயிகளுக்கு 5 ஏக்கர்களுக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள். இவர்கள் 16 மாநிலங்களின் 53 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இதில் மண்டிகள் மூலம் விற்பவர்கள் 36%, தனியார் மூலம் விற்பவர்கள் 26%, கார்ப்பரேட்டுகளுக்கு விற்பவர்கள் 2%தான்.

கிழக்கு மாநிலங்களான அஸாம், மேற்கு வங்கம், ஒடிசா, சத்திஸ்கரில் 39% விவசாயிகள் புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்தனர். 36% பேர் ஆதரித்தனர். கிழக்குப்பகுதியில் சிலர் ’சொல்ல முடியவில்லை’ என்று தெரிவித்தனர். தெற்குப்பகுதிகளில் விழிப்புணர்வு இல்லை. 26% விவசாயிகள் ‘எதுவும் சொல்ல முடியவில்லை’ என்றனர்.

மேற்குப்பகுதியில் 52% விவசாய மசோதாக்களுக்கு ஆதரவு. 48% எதிர்ப்பு. தேர்தல் நடக்கும் பிஹார், மற்ற மாநிலங்களான உ.பி., உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் 53% சட்டங்களை எதிர்க்கின்றனர். 47% ஆதரிக்கின்றனர்.

எதிர்ப்பவர்களில் 60% விவசாயிகள் தங்கள் பொருட்களை குறைந்த விலைக்கு விற்க நேரிடும் என்றனர். 38% விவசாயிகள் தனியார் நிறுவனங்களின் பிடியில் சிக்குவதாக அச்சம் தெரிவித்தனர், மூன்றில் ஒரு பங்கினர் குறைந்தபட்ச ஆதாரவிலையை அரசு முடிவுக்குக் கொண்டு வர அரசு விரும்புகிறது என்றனர். ஒப்பந்த வேளாண்மை மூலம் விவசாயிகள் கொத்தடிமைகளாக்கப்படுவார்கள் என்று 32% பேர் தெரிவித்தனர்.

விவசாயச் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தோரில் 47% பேர் தங்கள் விளைபொருளை சுதந்திரமாக விற்க முடியும் என்றும் இடைத்தரகர்களிடமிருந்து விடுதலை என்று 38% பேரும் தெரிவித்ததாக இந்தக் கருத்துக் கணிப்புக் கூறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x