பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் விடுதலையை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு: அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் விடுதலையை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு: அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு
Updated on
1 min read

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் சிபிஐ நீதிமன்றம் கடந்த மாதம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து உத்தரபிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தினர் (ஏஐஎம்பிஎல்பி) முடிவு செய்துள்ளனர்.

கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட் டது. இது தொடர்பாக சிபிஐநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. கரசேவகர்களை தூண்டியதாக பாஜக மூத்ததலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார் உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்தமாதம் 30-ல் வெளியான தீர்ப்பில், வலுவான ஆதாரங்கள்இல்லை எனக்கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஏஐஎம்பிஎல்பி -யின் தலைவர் மவுலானா சையத் முகம்மது ரபி ஹஸ்னி நத்வீ தலைமையில் நேற்று முன்தினம் காணொலிக் காட்சி மூலம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து ஏஐஎம்பிஎல்பி அமைப்பினர் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, "பாபர் மசூதி நிலப் பிரச்சினை வழக்கின் முக்கிய மனுதாரரான ஹாஜி மஹபூப் மற்றும் சிலர், சிபிஐ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளனர். இவர்களுடன் இணைந்து முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சியையும் எங்கள் வாரியம் கடுமையாக எதிர்க்கும்" என்றனர்.

சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு

ஏஐஎம்பிஎல்பி நிர்வாகிகளின் இதே கூட்டத்தில், பொது சிவில் சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயல்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிளையும் நேரில் சந்தித்து ஆலோசனை செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in