

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கடந்த 13-ம் தேதி காலை வடக்கு ஆந்திரா கடற் கரையோரம் காக்கிநாடா அருகில் கரையை கடந்தது. இதன்காரணமாக தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 117 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதி கன மழையால் தெலங்கானா தலைநகரான ஹைதராபாத் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஹைதராபாத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நகரின் தாழ் வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள் ளன. அந்தப் பகுதிகளில் இருந்து சுமார் 37 ஆயிரம் குடும்பத்தினர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருட்களை மாநில அரசு வழங்கியது. மேலும், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவிக் கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண் டலம் காரணமாக தெலங்கானா, ஆந்திரா வில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய் யக்கூடும் என ஹைதராபாத் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், மக்கள் மேலும் அச்சத்தில் உள்ளனர். முகாம்களில் உள்ளவர்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்புகள் குறித்து செய்தி யாளர்களிடம் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று கூறியதாவது:
தெலங்கானா மாநிலம் வெள்ளத்தால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது. எனவே, உடனடி நிவாரணமாக ரூ.1,470 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். மாநிலத்தில் இதுவரை 60 பேர் உயி ரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர் களுக்கு தலா ரூ.1 லட்சமும், வீடு மரா மத்து செய்ய ரூ.50 ஆயிரமும் வழங்கப் படும். ஹைதராபாத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும். இந்தப் பணி, செவ்வாய்க்கிழமை (இன்று) முதலே தொடங்கப்படும். இதற்காக உடனடி நிவா ரண நிதியாக மாநகராட்சிக்கு ரூ.550 கோடி நிதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு முதல்வர் சந்திரசேகர ராவ் கூறினார்.
ஆந்திராவில் பாதிப்பு
கடந்த 5 நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் ஆந்திராவின் கடலோர மாவட் டங்களான காகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள், மின்சார கம்பங்கள், பாலங்கள் சேதமடைந் தன. மழை வெள்ளத்துக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நெல்லூர், குண்டூர், கோதாவரி, கிருஷ்ணா, விசாகப்பட்டினம் மாவட்டங்களில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, முதல்வர் ஜெகன் மோகன் நேற்று காலை விமானத்தில் சென்று மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் சுசரிதா, கொடாலி நானி மற்றும் உயர் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
தொடர் மழையால் மாநிலம் முழு வதும் ரூ.4,450 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதில், உடனடி நிவாரண நிதியாக ரூ.2,250 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகத்துக்கு ஜெகன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசு ரூ.10 கோடி நிதி
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், ‘மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடரை தங்களது அரசு திறமையாகவும், விரைவாகவும் கையாண்டுள்ளது. வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு, தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் மற்றும் அரசின் ஆதரவையும், ஒற்றுமையின் அடையாளத்தையும் காட்டும் வகையில், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தெலங்கானா அரசுக்கு உடனடியாக ரூ.10 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதுதவிர, போர்வைகள், பாய்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக அனுப்பி வருகிறோம். தெலங்கானா அரசுக்கு தேவைப்படும் வேறு எந்த விதமான உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.