

தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆவணங்களை தயாரிப்பதற்கும், பதில் மனு தாக்கல் செய்வதற்கும் கூடுதலாக 6 வார கால அவகாசம் அளிக்குமாறு கர்நாடக அரசு மற்றும் திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு கடந்த ஜூன் 23-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இதைத் தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசு, திமுக தரப்பின் மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் உத்தரவிட்டது. இதையடுத்து நால்வர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஜெயலலிதா தரப்பின் மனுவுக்கு கர்நாடக அரசு, திமுக தரப்பு மேலும் 4 வார அவகாசத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டனர்.
மொத்தம் 8 வார கால அவகாசம் முடிந்து வரும் 12-ம் தேதி சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தொடங்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
திடீர் புதிய மனு
இந்நிலையில் நேற்று கர்நாடக அரசு வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார். அதில், ''ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்வதற்கு கீழமை நீதிமன்றத்தில் நிறைய ஆவணங்களை பெறவேண்டியுள்ளது. இந்த ஆவணங்களைப் பெற்று, படித்து, பதில் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே கர்நாடக அரசு பதில்மனு தாக்கல் செய்ய கூடுதலாக 6 வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர் வி.ஜி. பிரகாசம் தாக்கல் செய்துள்ள மனுவிலும் பதில் மனு தாக்கல் செய்வதற்கு கூடுதலாக 6 வாரங்கள் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.
இந்த இரு மனுக்களும் நாளை மறுநாள் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரும்போது, விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். இரு தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுவால் வழக்கின் விசாரணை தாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.