Last Updated : 12 Oct, 2015 02:47 PM

 

Published : 12 Oct 2015 02:47 PM
Last Updated : 12 Oct 2015 02:47 PM

சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கிறார் காஷ்மீர் எழுத்தாளர் குலாம் நபி கயால்

"நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்புணர்வு பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது" எனக் கூறி, சகிப்புத்தன்மை குறைந்து வருவதற்கு எதிராக சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்துவரும் அறிவுஜீவிகள் பட்டியலில் இணைந்துள்ளார் காஷ்மீர் கவிஞரும், எழுத்தாளருமான குலாம் நபி கயால்.

இது குறித்து அவர் கூறும்போது, "எனது விருதை நான் திருப்பி அளிப்பதாக முடிவு செய்துள்ளேன். நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தினர் பாதுகாப்பில்லாமல் உணர்கிறார்கள். அவர்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளது போல், நாட்டின் சிறுபான்மையினரை பாதுகாக்க இந்த அரசு தவறிவிட்டது. இத்தகைய மிக மோசமான நிலையை ஒரு மவுனியாக என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அதிகரித்து வருவதை கண்டிக்கும் வகையில் சாகித்ய அகாடமி எனக்கு வழங்கிய விருதினை நான் திருப்பி வழங்க முடிவு செய்திருக்கிறேன்.

பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபிறகு இந்தியாவில் வேதனையளிக்கும் மதவாத சூழல் உருவாகியுள்ளது. மத ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் இருதுருவங்களாக பிரித்தாளும் செயல்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் காஷ்மீர் விதிவிலக்கல்ல.

சமூக நல்லிணக்கத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் இத்தேசத்தில் இப்போது உருவாகியுள்ளது.

சுதந்திரமான பேச்சுரிமைக்கு மிகமோசமான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. மத அடையாளங்கும் அதே நிலைதான். ஆனால், கிறிஸ்தவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டாலும், முஸ்லிம்கள் கொல்லப்பட்டாலும், மத கடமைகளை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டாலும் பிரதமர் மவுனமாகவே இருக்கிறார்.

தாத்ரி சம்பவம் குறித்து பிரதமரின் காலம் தாழ்த்தப்பட்ட எதிர்வினை கண்டனத்துக்குரியது.

மக்கள் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என அடிப்படை உரிமைகள் தடை செய்யும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

எனவே, 1975-ம் ஆண்டு நான் எழுதிய காஷிக் மினார் (Luminaries) என்ற புத்தகத்துக்காக வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளேன். விருதுடன் வழங்கப்பட்ட ரொக்கப் பரிசு, தாமிரப் பட்டயத்தையும் திரும்ப வழங்குகிறேன்" என்றார்.

நாட்டின் பிற பகுதிகளில் நடைபெறும் வன்முறைகளை கண்டித்து காஷ்மீர் எழுத்தாளர் ஒருவர் இலக்கிய விருதை திருப்பி அளிக்க முன்வந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.

கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலை, மூட நம்பிக்கை ஒழிப்பு போராளிகள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பர்சானே ஆகியோர் படுகொலையை கண்டித்தும். இவ்விவகராத்தில் அரசின் நிலைப்பாடு தொடர்பாக கேள்வி எழுப்பியும்; சாகித்ய அகாடமியின் மவுனம் ஏனென்று கேள்வி எழுப்பியுள்ள எழுத்துலக அறிவுஜீவிகள் பலரும் சாகித்ய அகாடமி விருதினை திருப்பி வழங்கி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x