Last Updated : 19 Oct, 2020 08:48 PM

 

Published : 19 Oct 2020 08:48 PM
Last Updated : 19 Oct 2020 08:48 PM

பயணம் செய்பவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்: ஊபரில் புதிய விதிமுறை அமல்

இனி ஊபர் டேக்ஸியில் பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், அவர்கள் முக்ககவசம் அணிந்திருக்கும் செல்ஃபி புகைப்படத்தைப் பகிர்ந்தால் மட்டுமே அடுத்த சவாரியில் செல்ல முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த மே மாதம் முதல், ஊபர் கார்களை ஓட்டும் ஓட்டுநர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை அந்நிறுவனம் அமல் செய்தது. ஓட்டுநர்கள் முகக்கவசம் அணிந்திருக்கும் செல்ஃபி புகைப்படத்தைப் பகிர்ந்து சரிபார்க்கப்பட்ட பின்னரே சவாரியைத் தொடங்க வேண்டும். தற்போது இதே சரிபார்ப்பு முறை பயணிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஊபர் இந்தியாவைச் சேர்ந்த தலைமை அதிகாரி பவன் வைஷ் இது குறித்துப் பேசுகையில், "முதல் முறை சவாரி செய்யும்போது முகக்கவசம் அணியாத பயணிகள் பற்றிய தகவல் பகிரப்படும். இந்தப் புதிய கொள்கை பாதுகாப்பின் தரத்தை உயர்த்தும். உங்களுக்கு மட்டுமல்லாது அடுத்து பயணம் செய்பவருக்கும், ஓட்டுநருக்கும் பாதுகாப்பினைத் தரும்" என்று கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக கரோனா காலத்தை மனதில் கொண்டு பல புதிய விதிமுறைகளை ஊபர் அறிமுகம் செய்து வருகிறது. இதில் கோவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி ஒவ்வொரு ஓட்டுநரும் கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்பதும் அடங்கும். மேலும் ஓட்டுநரோ, பயணியோ, யாராவது ஒருவர் முகக்கவசம் அணியவில்லையென்றாலும் மற்றொருவர் அந்தச் சவாரியை ரத்து செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஊபர் நிறுவனம் இந்தியா முழுவதும் இருக்கும் அதன் ஓட்டுநர்களுக்கு 30 லட்சம் முகக் கவசங்கள், 2 லட்சம் கிருமி நாசினி பாட்டில்களை இதுவரை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x