Last Updated : 19 Oct, 2020 07:28 PM

 

Published : 19 Oct 2020 07:28 PM
Last Updated : 19 Oct 2020 07:28 PM

பொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி? மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்

மத்திய அரசு பொருளதாரத்தைக் கையாண்ட விதத்தையும், கரோனா வைரஸைக் கையாண்ட விதத்தையும் சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், பொருளாதாரம் மோசமான நிலையில் வீழ்ச்சி அடைந்தது ஆகியவற்றைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில் சர்வதேச நிதியம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 10.33 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று குறிப்பிட்டிருந்தது. அதைக் குறிப்பிட்டும், வங்கதேசத்தைவிட கரோனா வைரஸை இந்தியா மோசமாகக் கையாண்டது என்றும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, உலகப் பட்டினிக் குறியீட்டியில் இந்தியா 94-வது இடத்துக்குப் பின்தங்கியதையும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

உலகப் பட்டினிக் குறியீட்டில் உள்ள 107 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் உள்ளது. அண்டைநாடுகளான வங்கதேசம் 75-வது இடத்திலும் பாகிஸ்தான் 88-வது இடத்திலும் உள்ளன.

ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட அட்டவணை.

இந்த இரண்டு நாடுகளை விடவும் இந்தியா மோசமாக உள்ளது. இதைக் குறிப்பிட்ட ராகுல் காந்தி ட்விட்டரில், “இந்தியாவில் ஏழைகள் எல்லாம் பட்டினியோடு இருக்கிறார்கள். ஏனென்றால், மத்தியில் ஆளும் மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது” எனச் சாடியிருந்தார்.

இந்நிலையில் சர்வதேச நிதியம் வெளியிட்ட தகவலையும், கரோனா பாதிப்பைக் கணக்கிடும் வேர்ல்டோ மீட்டர் கணக்கீட்டையும் ஒப்பிட்டு மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார். இதற்கான வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதில், கரோனா காலத்தில் வங்கதேசம் அதிகபட்சமாக 3.4 சதவீதப் பொருளாதார வளர்ச்சியைப் பெறும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கரோனாவில் லட்சத்துக்கு 34 பேர் வங்க தேசத்தில் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல சீனாவில் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 1.9 சதவீதம் வளர்ச்சி அடையும். லட்சத்துக்கு 3 பேர்தான் கரோனாவில் உயிரிழந்தார்கள். ஆனால், இந்தியாவில் கரோனாவில் லட்சத்துக்கு 83 பேர் உயிரிழக்கிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.33 சதவீதம் வீழ்ச்சி அடையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி ட்விட்டரில், “எப்படிப் பொருளாதாரத்தை வேகமாக முழுமையாக அழிப்பது, எப்படி அதிகமான மக்கள் விரைவாக கரோனா தொற்றுக்கு ஆளாவது” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

வியட்நாமில் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதம் வளரும் என்றும், கரோனாவில் லட்சத்துக்கு 0.4 பேர் மட்டுமே உயிரிழந்தார்கள் என்றும் அந்த வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியம் என்றும், லட்சத்துக்கு 25 பேர் உயிரிழந்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 0.4 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்றும், லட்சத்துக்கு 30 பேர் கரோனாவில் உயிரிழந்தார்கள் என்றும் வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x