Last Updated : 19 Oct, 2020 05:55 PM

 

Published : 19 Oct 2020 05:55 PM
Last Updated : 19 Oct 2020 05:55 PM

வடக்கு கர்நாடகாவில் கடும் மழை; வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்: 36 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்

வடக்கு கர்நாடகா ஆறுகளில் பெருக்கெடுத்தோடும் கடும் மழை வெள்ளம் காரணமாக இதுவரை 36 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகாராஷ்டிராவில் பெய்த மழையால் அங்குள்ள பீமா நதி அக்டோபர் 14 ஆம் தேதி முதல் பெருக்கெடுத்துப் பாய்வதால், அங்குள்ள அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதாகவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி வடக்கு கர்நாடகாவின் கலாபுராகி, விஜயபுரா, யாத்கீர் மற்றும் ரைச்சூர் மாவட்டங்களில் கடும் மழை பெய்துவருகிறது. இதனால் நதிக்கரையோரத்தில் இருந்த ஏராளமான கிராமங்கள் மூழ்கியுள்ளன, மேலும் 36,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

பீமா நதியில் பாய்ந்துவரும் வெள்ளம் அபாய கட்டத்தைத் தாண்டியதால் தொடர்ந்து வெள்ள நிலைமை மோசமாக உள்ளது என்று அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.

இதுகுறித்து கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

''கிருஷ்ணா நதியின் துணை நதியான பீமா நதியில் அபாய அளவுக்கு மேல் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இந்நதி அருகே உள்ள கலாபுராகி, விஜயபுரா, யாத்கீர் மற்றும் ரைச்சூர் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத பலத்த மழை பெய்து வருவதால் கரையோர கிராமங்கள் நீரில் மூழ்கி வருகின்றன. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நான்கு மாவட்டங்களில் சுமார் 97 கிராமங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை நாங்கள் 36,290 பேரை வெளியேற்றியுள்ளோம். 174 நிவாரண முகாம்களை நாங்கள் திறந்து விட்டுள்ளோம். இதில் 28,400 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான மக்களை ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதில் ஈடுபட்டுள்ளனர். மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட முகாங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன''.

இவ்வாறு கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையில், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பெய்த பலத்த மழையால் நகரத்தின் சில இடங்களில் நீர் தேங்கியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 8.30 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் அடிப்படையிலான வானிலை ஆய்வகத்தில் பெங்களூரு நகரத்தில் 39.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x