

பாஜக பெண் வேட்பாளரை பற்றி கமல்நாத் அவதூறாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கும் தேசிய பெண்கள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் டப்ரா சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் இமர்தி தேவி போட்டியிடுகிறார். இந்த தொகுதி குவாலியர் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. குவாலியர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் செல்வாக்கு மிக்க தொகுதியாகும்.
ஜோதிராதிய சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான இமர்தி தேவி, கடந்த 3 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜோதிராதித்ய சிந்தியாவுடன் சேர்ந்து பாஜகவில் அவர் இணைந்தார். தற்போது அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், இமர்தி தேவியை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். அவரை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதற்கு தேசிய பெண்கள் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ஒரு தலைவரின் இதுபோன்ற பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது. அந்த வீடியோவில் உள்ள பேச்சு முழுமையாக அவதூறான ஒன்று. பெண்களை வேண்டுமென்றே இழிவாக பேசுவதாகும். பெண்கள் அதிகஅளவில் அரசியலில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் சூழலில் பெண் அரசியல்வாதியை மற்றொருவர் இதுபோன்று அவதூறாக பேசுவது ஏற்கத்தக்கதல்ல. மிகவும் பொறுப்பான பதவியை வகித்த ஒருவர் இதுபோன்று பெண்களை பற்றி பேசியது மிகவும் வருத்தத்துக்குரியது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கும் தேசிய பெண்கள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.