

2021-ம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை தேசிய, சர்வதேச கோவிட் 19 நெறிமுறைகளைப் பொறுத்து செயல்படுத்தப்படும் என்று சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
புதுடெல்லியில் ஹஜ் மறுஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
யாத்ரீகர்கள் வருவதற்கு சவுதி அரேபிய அரசாங்கம் இறுதி அழைப்பு விடுத்த பிறகு ஹஜ் 2021 குறித்த முடிவு எடுக்கப்படும். மேலும யாத்ரீகர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் விதமாக தேசிய மற்றும் சர்வதேச கோவிட் 19 வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும்.
ஹஜ் 2021 வரும் ஜூன்- ஜூலை மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளது, சவுதி அரேபிய அரசாங்கத்தால் எடுக்கப்படும் இது தொடர்பான முடிவுக்குப் பிறகு இந்தியாவின் ஹஜ் கமிட்டியும் பிற இந்திய ஏஜென்சிகளும் யாத்திரைக்கான விண்ணப்ப செயல்முறை மற்றும் பிற தொடர்புடைய ஏற்பாடுகளை முறையாக அறிவிக்கும்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக மக்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மிகவும் கவனமாக உறுதி செய்ய வேண்டியுள்ளது. சவுதி அரேபியா மற்றும் இந்திய அரசாங்கங்கள் வழங்க வேண்டிய தேவையான வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, ஹஜ் 2021 தொடர்பான இறுதி முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்படும்.
இந்தியா மற்றும் சவுதி அரேபியாவில் தங்குமிடம், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் பிற வசதிகள் தொடர்பான வழிகாட்டுதல்களின்படி முழு ஹஜ் செயல்முறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெறும். நோய்த்தொற்று எச்சரிக்கைகள் முன்னிட்டு யாத்ரீகர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு அரசாங்கம் மிகவும் முன்னுரிமை அளிக்கிறது.
இது தொடர்பாக இந்திய ஏஜென்சிகள் தேவையான ஏற்பாடுகளை உறுதி செய்யும், யாத்ரீகர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கமும் ஹஜ் குழுவும் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஹஜ் செயல்முறையை 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கியதன் காரணமாக, நோய்த் தொற் று காரணமாக ஹஜ் 2020 ரத்து செய்யப்பட்ட பின்னர் 1,23,000 பேருக்கு நேரடி வங்கி பரிமாற்ற (டிபிடி) முறை மூலம் ரூ 2,100 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, சவுதி அரேபிய அரசாங்கமும் போக்குவரத்துக்காக சுமார் ரூ 100 கோடியை திருப்பி அளித்துள்ளது.
இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.