

மகாராஷ்டிர மாநிலத்தில் தசரா ஊர்வலத்திற்கு மகாராஷ்டிர அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவெடுக்கும்படி உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள நந்தேத் குருத்வாரா ஆலயத்தில் 300 ஆண்டுகாலமாக நடைபெற்றுவரும் தசரா ஊர்வல நிகழ்ச்சிகளுக்கு மகாராஷ்ர அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில் நந்தேத் குருத்வாரா நிர்வாகக் குழு உச்ச நீதிமன்றத்தை நாடியது. நந்தேத் சீக்கிய குருத்வாரா சச்சண்ட் ஸ்ரீ ஹசூர் அப்சல்நகர் சாஹிப் வாரியம் அளித்துள்ள மனுவில், ''குருத்வாரா தகாத் ஸ்ரீ ஹசூர் அப்சல்நகர் உலகப் புகழ்பெற்ற ஒரு புனித இடமாகும். பத்தாவது சீக்கிய குரு ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜி மகாராஜின் கடைசி இடமாக இருந்ததற்காக மட்டுமின்றி, அவர் சச்சண்ட் செல்வதற்கு முன்பு குருக்ராந்த் சாஹிவ் ஜிக்கு குருவின் புனித இருக்கையை வழங்கிய இடமுமாக இவ்விடம் திகழ்கிறது.
இந்த குருத்வாரா ஆலயத்தில் 300 ஆண்டுகாலமாக தசரா நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. வழக்கமாக நடைபெறும் இந்தப் பழமைவாய்ந்த தசரா ஊர்வலத்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்'' என்று கோரப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில், இந்த விவகாரம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தசரா விடுமுறையின்போது கூடியிருந்த அமர்வு நீதிபதிகளிடம் இதுகுறித்து மகாராஷ்டிர அரசின் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், ''கோவிட்-19க்கு இடையில் தசரா ஊர்வலம் நடத்த அனுமதிப்பது நடைமுறையில் சாத்தியமான ஒன்றாக இருக்காது. மேலும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மதச் செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது என்பதை மகாராஷ்டிர அரசு நன்கு ஆராய்ந்து முடிவெடுத்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி உள்ளடக்கிய நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரணைக்குப் பின்னர் கூறியதாவது:
''கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் தசரா ஊர்வலம் நடத்துவதா வேண்டாமா என்பதை மகாராஷ்டிர மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யட்டும். கள நிலவரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமைக்குள் குருத்வாரா நிர்வாகம் எஸ்.டி.எம்.ஏ உடன் ஒரு பிரதிநிதித்துவ அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மகாராஷ்டிர மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (எஸ்.டி.எம்.ஏ) முடிவில் திருப்தி அடையாவிட்டால் குருத்வாரா நிர்வாக வாரியம் மும்பை உயர் நீதிமன்றத்திற்குச் செல்லமுடியும்''.
இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.