Last Updated : 19 Oct, 2020 01:36 PM

 

Published : 19 Oct 2020 01:36 PM
Last Updated : 19 Oct 2020 01:36 PM

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவிடம் மாநில கிரிக்கெட் அமைப்பின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அறிவித்தது.

இந்த அறிவிப்பைச் செய்வதற்கு முதல் நாள் இரவில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் முன்னாள் முதல்வர்கள் மூவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த வாரம் 3 தலைவர்களும் சேர்ந்து ஆலோசனை நடத்தினர்.

இந்தச் சூழலில், ஜம்மு காஷ்மீர் முதல்வராக பரூக் அப்துல்லா இருந்தபோது, மாநில கிரிக்கெட் அமைப்பின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் இன்று அமலாக்கப் பிரிவினர் பரூக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தினர்.

கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பு (பிசிசிஐ) ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் அமைப்புக்கு வழங்கிய நிதியில் ரூ.43.69 கோடி நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் விசாரணை நடத்திய சிபிஐ அமைப்பு, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் பொதுச்செயலாளர் முகமது சலீம் கான், பொருளாளர் அஸன் அகமது மிர்ஸா, மிர் மன்சூர் காசன்பர் அலி, பசிர் அகமது மிஸ்கர், குல்சர் அகமது பெய்க் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சிபிஐ முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து அமலாக்கப் பிரிவும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் கடந்த 2005-2006 முதல் 2011 -2012 வரை பிசிசிஐ அமைப்பிடம் 3 விதமான வங்கிக் கணக்கில் ரூ.94.06 கோடியை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பு பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்தப் பணம் கணக்கில் கொண்டு வரப்படவில்லை.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் காலை பரூக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தினர். ஆனால், என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டன, விசாரணை நடத்தப்பட்ட நேரம் குறித்துத் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதுகுறித்து பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சம்மனுக்கு விளக்கம் அளித்துள்ளோம். குப்கார் தீர்மானத்தையொட்டி காஷ்மீர் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். அதனால் ஏற்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை இது. விசாரணை மட்டுமே நடத்தப்பட்டது. எந்தவிதமான ஆய்வுகளும் நடத்தப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x