

உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் எழுதிய கடிதத்தில் சில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்கள் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மகாராஷ்டிராவில் மட்டும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், கோயில் திறப்பதில் ஏன் தாமதம் எனக் கேட்டு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதினார். அதில், ‘‘நீங்கள் திடீரென மதச்சார்பற்றவாதியாக மாறிவிட்டீர்களா?’’ என்றும் ஆளுநர் கூறியிருந்தார். இந்நிலையி்ல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அனுப்பிய கடிதத்தை பார்த்தேன். ஆளுநர் சாதாரணமாகத்தான் தனது கருத்துக்களை சொல்லியிருக்கிறார். எனினும் அக்கடிதத்தில் சில வார்த்தைகளை அவர் தவிர்த்திருக்கலாம். மேலும், வார்த்தைகளை அவர் கவனமாக தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். இவ்வாறு அமித் ஷா கூறினார்.