Last Updated : 18 Oct, 2020 04:47 PM

 

Published : 18 Oct 2020 04:47 PM
Last Updated : 18 Oct 2020 04:47 PM

நீட் தேர்வு: உத்தரப்பிரதேசத்தில் இருந்து அதிகமான மாணவர்கள் தேர்ச்சி: மகாராஷ்டிராவுக்கு 2-வது இடம்

கோப்புப்படம்

புதுடெல்லி

நாடுமுழுவதும் நடந்த மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து அதிகமான மாணவர்கள் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. கரோனாவைரஸ் பரவலால் தவறவிட்ட மாணவர்களுக்காக நீட் தேர்வு கடந்த 14-ம் தேதி நடந்தது. இந்த முறை 13.66 லட்சம் மாணவர்கள் நீடி தேர்வு எழுதினர்.

இந்த தேர்வின் முடிவுகள் கடந்த இரு நாட்களுக்கு முன் வெளியாகின. இதுகுறித்து தேசிய தேர்வு அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில் “ இந்த ஆண்டு நடந்த மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் 7.70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் 4.27 லட்சம் மாணவிகளும், 3.43 லட்சம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர், தேர்வு எழுதிய 4 திருநங்கைகளும் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

இந்த ஆண்டு அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து 88,889 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 79,974 மாணவர்களும், ராஜஸ்தானில் 65,758மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

4-வது இடத்தில் கேரள மாநிலத்தில் 59,404 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், கர்நாடக மாநிலத்தில் 55,009 மாணவர்களும், டெல்லியில் 23,554 மாணவர்களும், ஹரியாணாவில் 22, 395 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே திரிபுரா மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களைவிட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக இருந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, மனிதத்தவறுகளே காரணம் எனக் கண்டறியப்பட்டு அந்த தவறு களையப்பட்டது.

இந்த ஆண்டு நீட் தேர்வை 11 மொழிகளில் எழுத அனுமதி்கப்பட்டது. ஆங்கிலம், இந்தி, அசாமி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 77 சதவீதம் மாணவர்கள் ஆங்கில வழியில் நீட் தேர்வு எழுதியுள்ளது தெரியவந்தது, 12 சதவீதம் பேர் இந்தியிலும், 11 சதவீதம் மற்ற மொழிகளிலும் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x