

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் கோவிட் -19 வார்டில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஆயுதச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 32 வயது நபர் ஒருவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இவருக்கு கரோனா சோதனை நடத்தப்பட்ட பிறகு மாவட்ட மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட கோவிட் -19 வார்டில் இருந்து தப்பியோடியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
லகான் பவாரி என்பவர் ராஜஸ்தானில் நடந்த ஒரு குற்றச் சம்பவம் காரணமாக வியாழக்கிழமை ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் மறுநாள் வெள்ளிக்கிழமை விசாரணைக்காக பூண்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியது.
சிறைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் கோவிட் -19 சோதனை செய்யப்பட்டது. மேலும் அவரது பரிசோதனை முடிவு வரும்வரையில் அவர் மாவட்ட அரசு மருத்துவமனையின் கைதி தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
வார்டின் வாயிலில் காவலர்கள் நிறுத்தப்பட்டனர். உள்ளே எட்டு ஒன்பது கைதிகள் இருந்தனர், எனினும் குற்றம் சாட்டப்பட்டவர் வார்டில் ஒரு ஜன்னல் வழியாக தப்பித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடைப்பட்ட இரவில் லகான் பவாரி தப்பியுள்ளார். தப்பிச்சென்ற கைதி பவாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரைத் தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தனியே போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.