

மேற்கு வங்க மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவிக்கும் முன், பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தின் நிலையை ஆய்வு செய்துவிட்டு பேசலாம், அங்கு சட்டம் ஒழுங்கே இல்லை என்று அமித் ஷாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளி்த்தார். அப்போது அவர் மேற்கு வங்கத்தின் நிலை குறித்து கடுமயைாக விமர்சித்தார்.
அமித் ஷா பேசுகையில் “ அம்பான் புயலின்போது, ஒட்டுமொத்த நிவாண உதவுகளும் தவறானவர்களின் கைகளுக்குச் சென்றது. உணவு தானியங்களை மக்களுக்கு விநியோகம் செய்ததில் ஏராளமான ஊழல் நடந்ததாக புகார்கள் வந்தன. ஒட்டுமொத்த நிவாரணப் பணிகளிலும் ஊழல் நடந்தன. கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதிலும் மே.வங்க அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.
மே.வங்கத்தில் ஊழல் உச்ச கட்டத்தில் இருக்கிறது, சட்டம் ஒழுங்கு மோசமடைந்துவிட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வெடிகுண்டு தொழிற்சாலை இருக்கிறது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விமர்சித்தால் கொல்லப்படுகிறார்கள், தவறான குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்யப்படுகிறார்கள். இதுபோன்ற மற்ற மாநிலங்களில் நடக்கவில்லை. ஒருநேரத்தில் கேரளாவில் இதுபோன்று நடந்தது. தற்போதுஅங்கும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் மே மாதத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பார்த்து, பாஜக அல்லது எந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவரும் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் எனச் சொல்வது இயல்பானது. களச்சூழலுக்கு ஏற்ப, அரசியலமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டுத்தான் நாங்கள் பணியாற்றுகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி தரும் விதத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் எம்.பியுமான டெரீக் ஓ பிரையன் அறிக்கை விடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அமித் ஷா உடல்நிலை குறித்து தவறான செய்திகள் பரவின. அவர் விரைவாக குணமடைந்து வர வேண்டும். அரசியல் கொலைகள் அதிகரித்துள்ளதாக அமித் ஷா குற்றம்சாட்டுகிறார். பாஜக வேண்டுமென்றே காசநோய், புற்றுநோயில் இறந்தவர்களைக் கூட அரசியல் கொலைப்பட்டியலில் சேர்த்து அதிகரித்து காட்டுகிறது.
அரசியல் கொலைகள் குறித்து பேசும் அமித் ஷா, மேற்குவங்கத்தில் அவர் சாந்திருக்கும் கட்சிக்குள் நடக்கும் மோதல் பற்றியும், கொலைப்பற்றியும் பேசுவாரா. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆண்டபோது இருந்த சட்டம் ஒழுங்கு நிலையைப் படித்து, தற்போதுள்ள நிலையுடன் அவர் ஆய்வு செய்ய வேண்டும்.
மாநிலத்தில் அமைதி, ஒற்றுமையை நிலைப்படுத்த திரிணமூல் காங்கிரஸ் கடுமையைாக பாடுபட்டு வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசும் முன் குஜராத், உத்தரப்பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை உற்றுநோக்க வேண்டும். அரசியல் கொலைகள் காரணம் பற்றி அமித் ஷாவுக்கு நன்கு தெரிந்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.