

மகாராஷ்டிராவில் பெருந்தொற்று காலத்திலும் கிராமவாசிகளுக்கு சிகிச்சையளிக்க சைக்கிளில் துணிச்சல் பயணம் மேற்கொண்டுவரும் 87 வயது மருத்துவர் அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்று வருகிறார்.
கோவிட் -19 தொற்றுநோய் பெரும்பாலும் வயதானவர்களைத்தான் தாக்குகிறது. இதன் காரணமாக கடந்த பல மாதங்களாக பெரும்பாலான மூத்த குடிமக்கள் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் முல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 87 வயதான மருத்துவர் தன்னைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தொலைதூர கிராமங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காகவே தனது வீட்டிலிருந்து ஒவ்வொரு நாளும் சைக்கிளில் புறபபட்டுச் செல்கிறார்.
ராம்சந்திர தண்டேகர் என்ற அந்த மருத்துவர் கடந்த 60 ஆண்டுகளாக முல், பொம்பூர்ணா மற்றும் பல்லார்ஷா தாலுகாக்களில் உள்ள கிராமங்களுக்கு தினமும் குறைந்தது 10 கிலோ மீட்டர் வெறுங்காலுடனே நடந்துசென்று நோயாளிகளை கவனித்து வந்தார்.
தற்போதைய சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளில் நிபுணரான இந்த மருத்துவரை தனது வீட்டை விட்டு வெளியேறுவதை யாரும் தடுக்கவில்லை.
இதுகுறித்து தண்டேகர் பிடிஐயிடம் கூறுகையில்: "ஆரம்பத்தில் உள்ளது போலவே இப்போதும் கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு தன்னலமற்ற சேவையை மேலும் தொடர்ந்து வழங்க விரும்புகிறேன்'' என்றார்.
தனது தந்தையின் சேவையைப் பற்றி அவருடைய மூத்த மகன் ஜெயந்த் தண்டேகர் கூறியதாவது:
1957-58 ஆம் ஆண்டில் நாக்பூர் ஹோமியோபதி கல்லூரியில் டிப்ளமோ முடித்த பின்னர், சந்திரபூர் ஹோமியோபதி கல்லூரியில் விரிவுரையாளராக ஒரு வருடம் பணியாற்றி வருகிறார். வார நாட்களில் கிராமங்களுக்குச் செல்வதற்கான ஒரு நிலையான கால அட்டவணையை அவர் வைத்துள்ளார். அதன்படி தவறாமல் சென்றுவிடுவார். மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை மட்டுமே தன்னுடன் அவர் எடுத்துச் செல்கிறார். அவர் தனது பயணங்களின் போது மொபைல் போன் அல்லது கடிகாரத்தை கூட எடுத்துச் செல்வதில்லை.
சில நேரங்களில் தொலைதூர தாலுகாக்களில் உள்ள நோயாளிகளை தேடிச் சென்று பார்க்க வேண்டியிருந்தால், அவர் பஸ்ஸில் பயணம் செய்கிறார், மற்றபடி சுழற்சி முறையில் அவர் கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் செல்கிறார். அவர் வீடுதிரும்ப தாமதமாகிவிட்டால், அவர் அங்கேயே ஒருவரின் வீட்டில் தங்குவதைத் தேர்வுசெய்கிறார்.எல்லோரும் அவரை டாக்டர் சஹாப் முல் வாலே" என்று அன்பாக அழைக்கிறார்கள், மேலும் அவர் ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் 20 வீடுகளுக்குச் செல்கிறார்.
முன்புபோல அதிக அளவில் இல்லாமல் அவர் தேடிச் செல்லும் பயணங்கள் இப்போது சற்றே குறைந்துவிட்டன எனினும், தொற்றுநோய்க்கான ஆபத்து இருந்தபோதிலும் தொடர்ந்து தனது நோயாளிகளுக்கு மருத்துவ சேவை செய்துகொண்டுதான் வருகிறார்.
காய்ச்சல் அல்லது வைரஸின் பிற அறிகுறிகளால் அவதிப்பட்டுவருபவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கும்படி அவர் வழிகாட்டுகிறா. இந்த வயதிலும் அவர் சைக்கிளில் புறப்பட்டு செல்வதைக் கண்டு எனக்கு பயமில்லை. எனது தந்தையின் தன்னலமற்ற சேவையை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.''
இவ்வாறு 87 வயது முதிய மருத்துவரின் மூத்த மகன் தெரிவித்தார்.